சென்றெகுலாஸ் தோட்டத்தில் இடம்பெற்ற காட்டேரியம்மன் திருவிழா 
வரலாற்று பார்வை





தென் இந்தியாவின் நாமக்கள் மாவட்டம் நல்லிப்பாளையத்திலிருந்து இலங்கைக்கு பெருந்தோட்ட பயிர் செய்கைக்காக அழைத்துவரப்பட்ட மலையகத்தழிழர்களே இந்த காட்டேரியம்மன் திருவிழாவினையும் கூடவே அழைத்து வந்தனர் எனலாம். இவ்வாறு கொண்டு வரப்பட்ட இந்த காட்டேரியம்மன் திருவிழா மலையகத்தில் சென்றெகுலாஸ் தோட்டத்தில்தான் சிறப்பிடம் பெறுகின்றது. இங்கு இத்திருவிழா ஆரம்பிக்கப்பட்ட காலம் என்பது யாருக்கும் தெரியவில்லை எனவும் தனது மூத்தகுடிகள்தான் ஆரம்பித்தனர் எனவும் இத்தோட்டத்தின் முதியவர்கள் தெரிவித்தனர்.
எனினும் காட்டேரியம்மன் திருவிழாவை செல்லக்குட்டி கவுண்டர் என்பவர் செய்து வந்ததாகவும் அவர் பிறகு இந்தியா சென்றவுடன் தோட்டத்தின் முதியவர்களும் இளைஞர்களும் சேர்ந்து மிக ஆர்வத்துடன் இத்திருவிழாவினை நடத்தி வருவது சிறப்புக்குறியதாகும்.

இதன் வரலாற்றை நோக்குமிடத்து மாரியம்மனின் கோட்டையை துஸ்ட சக்திகள் உடைத்தெரிய வரும் போது மாரியம்மன் காட்டேரியம்மனாக (மையான காளியாக) உருவெடுத்து துஸ்ட சக்திகளை விரட்டியடிப்பதாக கூறுகின்றனர். இத்திருவிழாவானது பிடி மண் எடுக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது.
ஒருவர் காட்டேரியம்மனாக வேடம் தரித்து காணப்பட ஏனைய சிலர் துஸ்ட சக்திகள் போன்று வேடம் தரித்து காணப்படுகின்றனர். காட்Nரியம்மன் கருப்பாடை தரித்தவளாகவும் சடாமுடியுடனும் காட்சியளிக்கின்றாள் துஸ்ட சக்திகளும் கருப்பாடையுடன் உடல், முகம் என்பனவற்றில் கருப்பு மைபூசி காட்சியளிக்கின்றனர்.

பின்னர் துஸ்ட சக்திகள் காட்டேரியம்மனை கோபம் மூட்டுவது போன்ற பாடல்கள் இடம்பெறுகின்றது இதில் ' பச்சை உலக்கை பாரமமில்ல, பச்சை பால், பச்சை முட்டை பாரமில்ல போன்ற பாடல்கள் இடம் பெறுகின்றன.' அத்துடன் ஒரு வகை நடனமும் இடம் பெறுகின்றது. இங்கு காட்டேரி அம்மன் கோபம் கொண்டவளாக துஸ்ட சக்திகளை விரட்டியடிப்பதாக நிகழ்வு அமைகின்றது.
காட்டேரியம்மன் கையில் திரிசூலத்திற்கு பதிலாக சுலகும் துஸ்டசக்திகளின் கையில் கடப்பாறைக்கு பதிலாக உலக்கையும் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் இந்த அம்மனுக்கு நேர்த்தி கடன் வைக்கும் நிகழ்வும் அத்துடன் நேர்த்தி கடனை பூர்த்தி செய்யும் நிகழ்வும் திருவிழாவின் போது இடம் பெறுகின்றது. பக்கதர்கள் பால், முட்டை, தேசிக்காய் என்பவற்றை காட்டேரியம்மனுக்கு வழங்கி நேர்த்தியை நிறைவு செய்கின்றனர்.

காட்டேரியம்மன் திருவிழாவை நடத்துவதனால் அத்தோட்டத்தில் செல்வசெழிப்பு காணப்படுவதாகவும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைபேறு கிடைப்பதாகவும் துஸ்ட சக்திகள் விரட்டியடிக்கப்படுவதாகவும், துர்மரணங்கள் சம்பவிப்பதில்லை என்றும் கடந்த ஐந்து வருடங்களுக்குள் இதுவரை ஒரு மரணம் கூட இடம் பெறவில்லை என்றும் அத்தோட்ட மக்கள் கூறுகின்றனர். இந்த காட்டேரியம்மன் திருவிழாவை கண்டு மகிழ அம்மனின் ஆசி பெற மலையகத்தின் பல இடங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது அற்புதம். மக்களை ஒன்று திரட்டும் சமூக அரங்காக இத்திருவிழா இடம் பெறுகின்றது.