கௌடில்யர்


புராதன இந்திய அரசியல் கோட்பாடுகள் பல காணப்படுகின்றன. இப்புராதன இந்திய அரசியல் கோட்பாடுகளுள் ஒன்றே கௌடில்யரத கோட்பாடாகும். மனித வாழ்வுடன் தொடர்புபடும் அனேக விடயங்களுடன் கௌடில்யர் தொடர்புபடுகின்றார். நாகரீகம், கலாசாரம், நலன்புரி அரசு (Welfare State) போன்ற அனைத்து விடயங்களும் கௌடில்யரின் சிந்தனைக்குட்படுகின்றன. ‘நலன்பேணும் அரசு’ என்ற சிந்தனை; புராதன இந்தியாவிற்கேயுரியதாகும். கௌடில்யரின் அர்த்த சாஸ்த்திரம் என்னும் நூலே இவ்வரசியல் சிந்தனையின் மூலநூலாகும். இந்நூல் கி.மு. 326 ஆண்டில் எழுதப்பட்டதாகும். கௌடில்யரின் எண்ணங்களும், சிந்தனைகளும், அர்த்த சாஸ்த்திரத்தினூடாகவே பிறக்கின்றன. கௌடில்யரின் நலன்பேணும் அரசு என்ற சிந்தனை மேற்குத் தேச கல்வியாளர்களின் கவனத்தினை ஈர்த்திருக்கவில்லை. ‘நலன் பேணும் அரசு’ என்ற சிந்தனை ஐரோப்பாவிற்கேயுரியது என்றதொரு கருத்து காணப்படுகின்றது. அத்துடன் இச்சிந்தனை மேற்குத் தேசத்தில் தோன்றியதொரு சிந்தனை என்ற கருத்தும் காணப்படுகின்றது.
நலன்பேணும் அரசும்
இந்திய சிந்தனைகள், முழுப்பிரபஞ்சமும் இறைவனின் படைப்பு என்பதுடனும்,ஆத்மஞானத்துடனும் தொடர்புடையதாகும். இச்சிந்தனை தற்கால இந்திய சிந்தனையாளர்களாகிய ஆதிசங்கரர், புத்தர், காந்தி ஆகியோர்களிடமும் இருந்தது. மனிதர்கள் அனைவரதும் வாழ்க்கை பிரபஞ்சத்துடன் தொடர்புடையதாகும் என்பது கௌடில்யரின் கருத்தாகும். சமூக ஒழுங்கமைப்பும் அரச செயற்பாடும் பொதுவான நலன்களையும், பொது நோக்கங்களையும் இலக்காக கொண்டிருக்க வேண்டும். மனிதனின் நலன் என்பது ஆன்மீக பயணத்திற்கான ஆரம்பப் படியாகும். எனவே தனிமனிதன் மகிழ்ச்சியாகவும், நலத்துடனும், வாழ்வதற்கு ஏற்ப சமூக நிறுவனங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.
நலன்பேணும் அரசு எல்லாப் பிரஜைகளினதும் நலனைக் கருத்தில் கொண்டு எல்லா வளங்களையும் பயன்படுத்தி நல்வாழ்விற்கு திட்டமிடல் வேண்டும். மேலும் செல்வம் என்பது மிகவும் உயர்ந்த பலமாகும். அரசு ஒன்று தனது நோக்கத்தினை அடைவதற்கு இத்தேசிய செல்வங்களே பயன்படுகின்றன. ஒரு அரசு பிரதானமாக பின்வரும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
  1. சமூக ஒழுங்கமைப்பினை உறுதியாக பின்பற்ற வேண்டும் – வர்ணாச்சிரம தர்ம ஒழுங்கமைப்பிற்கு ஏற்ப சமூக ஒழுங்கமைப்பினை பேணுதல். இதுவே தர்மம் ஆகும்.
  2. மக்களின் நலன்களை கவனிக்க வேண்டும் – மகிழ்ச்சியான வாழ்க்கை, எல்லா வளங்களும் கிடைக்கச் செய்தல், போன்ற நலன்களை கவனித்தல்.
  3. எல்லா பிரஜைகளுக்கும் பொதுவான சட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.
  4. சமூக பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் – உள்நாட்டு ஒழுங்கையும், அமைதியையும் பேணுவதுடன், அன்னிய ஆக்கிரமிப்பில் இருந்தும் பாதுகாத்தல்.
  5. பொது வேலைகளை கவனிக்க வேண்டும். – வெளியுறவு, இராஜதந்திர சேவைகள்,போன்றவற்றின் மூலம் பொதுக் கடமைகளை கவனிக்க வேண்டும்.
  6. இயற்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் பெரும் துன்பத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாத்தல் வேண்டும். இவைகள் அரசின் செயற்பாடுகளாக இருக்க வேண்டும் .
சமூக, பொருளாதார, செயற்பாடுகளில் பங்கேற்றபதாகவும், தலையிடுவதாகவும், ஒழுங்குபடுத்துவதாகவும் அரசு இருக்க வேண்டும். அதேநேரத்தில் தனியாள் பொருளாதார முயற்சிகளை பல்வேறு வழிகளிலும் கட்டுப்படுத்துகின்றதாக இருக்க வேண்டும். இலாபநோக்கம், தரம், நிறை, அளவு, நீதியான விலை போன்றவை அரசினால் கட்டுப்படுத்தப்படல் வேண்டும். ஏனெனில் தனியார் பொருளாதார முயற்சிகள் பொதுவாக இலாப நோக்கம் கொண்டவைகளாககும். இதனால் மக்கள் நலன் பாதிப்படையும். எனவே அரச கட்டுப்பாடு அல்லது தலையீட்டினை கௌடில்யர் விரும்புகின்றார்.
கௌடில்யர் வேலை கொள்பவன், வேலையாட்கள் ஆகியோர்களிற்கு இடையிலான தொடர்பு பற்றியும் குறிப்பிடுகின்றார். அரசிற்குச் சொந்தமான இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும், அதனை ஒழுங்குபடுத்துவதும் அரசின் கடமையாகும். மேலும் மக்களுக்கு பயன்தரக் கூடிய விலங்குகளை பேணுவதுடன் சமூக நன்மைக்காக பொருட்களை இறக்குமதி செய்வதும் அரசின் கடமையாகும்.
நலன்பேணும் அரசு தனிமனிதர்களுடைய பழக்கவழக்கங்களிற்கும் பொறுப்பானதாகும். தனிமனிதர்கள் தங்கள் குடும்பத்தை கைவிட்டால் அவர்களை அரசு தண்டிக்க வேண்டும். மரபு ரீதியான உறவுக்கு ஊடாக கணவன், மனைவி, தந்தை, மகள், சகோதரன், சகோதரி ஏனைய உறவுகளை பேண வேண்டும். அரசானது மனிதனது சமூக, பொருளாதார, கலாசார ஒழுக்க விடயங்களில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
பஞ்சம், தொற்றுநோய்கள் பரவும் காலத்தில் அரசு மக்களுக்கு தேவையான தானியங்களையும், விதைகளையும் இலவசமாக தேவைக்கு ஏற்ப விநியோகிக்க வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படின் உணவு, உறைவிட வசதி, பாதுகாப்பாக இடம் பெயர வைத்தல், இதற்கான போக்குவரத்து வசதிகள் யாவற்றையும் அரசு இலவசமாக மக்களின் தேவைக்கு ஏற்ப வழங்க வேண்டும். மொத்தத்தில் மக்களின் துன்பங்கள் யாவற்றினையும் நிவர்த்தி செய்கின்ற பொறுப்பு அரசிற்குரியதாகும்.
சமூகத்தினை ஒழுங்குபடுத்தவும், திட்டமிடவும், பொருளாதாரத்தினைத் திட்டமிடவும், அரச நிர்வாக இயந்திரம் முக்கிய பங்காற்ற வேண்டும். நிர்வாகிகள், மக்களுடைய சமூக பொருளாதார வாழ்க்கை நிலைகளை உயர்த்துவதற்கு பல்வேறு சட்டங்களினையும் இயற்ற வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் நிர்வாகத்தினை ஒழுங்கமைக்க வேண்டும். நிர்வாக ஒழுங்கமைப்பு, நிதி ஒழுங்கமைப்பு, நீதி நிர்வாகம், தனியாளினதும், பொதுச் சேவையில் உள்ள ஊழல்களினை நீக்குதல் போன்றவற்றிற்கு ஏற்ப நிர்வாகமானது ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.
ஆட்சியாளன்
கௌடில்யர் அரசனை சுவாமி என அழைக்கின்றார். இவரே அரசின் தலைவராகும்.இவரை முதன்மைப்படுத்தியே ஆட்சிக்கலை தொடர்பாக கூறுகின்றார். அரசனைச் சுற்றியே அரசின் ஏனைய மூலங்கள் எல்லாம் இயங்குகின்றன. நலன்பேணும் சமூகம் ஒன்றின் வெற்றி அரசனின் பொறுப்பிலும், தலைமைத்துவத்திலுமே சார்ந்திருக்கின்றது அல்லது தங்கியிருக்கின்றது. அரசன் உதவியற்றவர்களின் பாதுகாவலனாகவும், வீடற்றவர்களுக்கு வீடு வழங்குபவனாகவும் மகன் இல்லாதவர்களுக்கு மகனாகவும், தந்தை இல்லாதவர்களுக்கு தந்தையாகவும் இருக்க வேண்டும்.
அரசன் மக்களுடைய முகவராக தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாட்டின் சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டு சட்டங்களை உருவாக்க வேண்டும். சம்பிரதாயங்கள் தான் ஒரு நாட்டின் அரசியல் திட்டமாகவும், நீதிச் சட்டங்களாகவும் இருக்க வேண்டும். அரசன் கௌடில்யரின் அர்த்தசாஸ்த்திரத்தின் மையப் பொருளாகும். ஏறக்குறைய அரசின் செயற்பாடுகள் அனைத்தும் அரசனாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே தான் கௌடில்யர் அரசனை ஒரு அரசின் தூணாகவும், ஆட்சிக்கலை நுட்பத்தின் எஜமானாகவும் உருவாக்குகின்றார்.
கௌடில்யர் அரசன் சிறந்த கல்விமானாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றார். ஏனெனில் அரசனின் மனமும், உடலும் தூய்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால்தான் மக்களிற்கான நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இதற்காக இளவரசன், எண்கணிதம், எழுத்தறிவு, தத்துவம், பொருளியல், நிர்வாகம், விஞ்ஞானம், அரசியல் போன்ற கல்வியை கற்க வேண்டும். இப்பாடங்கள் யாவும் பொருத்தமான ஆசிரியர்களிடம் கற்க வேண்டும்.
இளவரசன் தனது உடலை பேணுவதற்காக பிரமச்சரியத்தை ஒழுங்காக பேணிவருதல் வேண்டும். பிரமச்சரிய வாழ்க்கை 16 வயது வரை நீடிக்க வேண்டும். இதன் பின்னர் இளவரன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னர் புராண இதிகாசங்களாகிய இராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களைக் கற்க வேண்டும். மேலும் தர்ம சாஸ்த்திர நூல்களாகிய மனு, அர்த்தசாஸ்த்திரங்களை கற்க வேண்டும். இந்நூல்களில் சட்ட நுணுக்கங்கள் கூறப்பட்டுள்ளன. இளவரசன் தனது உடலில் எவ்வித நோய்களும் தொற்றாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக சிறப்பான பயிற்சியையும், கட்டுப்பாட்டினையும் பேணிவர வேண்டும். இளவரசன் சுய கட்டுப்பாடு கொண்டவனாக இருக்க வேண்டும்.
அரசன் சிறப்பான ஒழுக்கத்தினையும், புரிந்துணர்வினையும் கொண்டவனாக இருக்க வேண்டும் அரசனின் செயற்பாடும், தர்மமும் மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். அரசன் நீதியை நிலை நாட்டுபவனாக இருக்க வேண்டும். மக்கள் சமத்துவமாகவும், நீதியாகவும், நடத்தப்படுவதை அரசன் உறுதிப்படுத்த வேண்டும. இந்திய மரபாகிய வர்ணாச்சிரம தர்மத்தினை பேணிக்காப்பதன் மூலம் ‘நலன் பேணுதல்’ என்ற எண்ணக்கருவினை உறுதிப்படுத்துதல் வேண்டும். அரசனே சட்ட , நிர்வாக, நீதி, நிதி, இராணுவ, வர்த்தக, கலை, கல்வி போன்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் பொறுப்பானவனாக இருக்க வேண்டும்.
அரசனின் பிரதான கடமை அவனுடைய தர்மத்தினை நிறைவேற்றுவதாகும். இக்கடமைகள் சட்டப்படியான கடமைகள் என்பதை விட ‘நலன்புரி’ கடமைகள் என வரையறுப்பதே சிறப்பானதாகும். அரசன் கல்வி, சமயம், கலை, விவசாயம், வர்த்தக அபிவிருத்திகளை முன்னேற்றுகின்ற கடமை உணர்வு கொண்டவனாக இருக்க வேண்டும். கௌடில்யரின் நலன்பேணும் அரசு “ குடிகளின் ஆட்சியாகவே இருக்கும். இது இராணுவம் சார்ந்த ஒன்றாக இருக்கக் கூடாது. சமூகத்திலுள்ள தனிமனிதர்கள் ஒவ்வொருவரதும் நலனையும் அடிப்படையாக கொண்டு அரசு உருவாக்கப்பட வேண்டும். “சமூகத்தின் தனிமனிதர்கள் ஒவ்வொருவரதும் நலனையும் அடிப்படையாகக் கொண்டே ஆட்சியாளன் ஆட்சி செய்ய வேண்டும்.

மாக்கியவல்லி

clip_image002இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தில் 1469ஆம் ஆண்டு வைகாசி மாதம் 3ஆம் திகதி நிக்கலோ மாக்கியவல்லி பிறந்தார். இவருடைய குடும்பம் பணவசதியோ, சமூக அந்தஸ்த்தில் உயர்ந்த குடும்பமாகவோ இருந்திருக்கவில்லை. ஆனால் நகர மட்ட மானிட வட்டத்திற்குள் புகழ்வாய்ந்த குடும்பமாக காணப்பட்டிருந்தது. மாக்கியவல்லியின் தந்தை ஒரு சட்டத்தரணியாக இருந்ததுடன் புராதன வரலாறு பலவற்றையும் கற்றிருந்தார். மாக்கியவல்லி புளோரன்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை பூர்த்தி செய்ததுடன் இலத்தீன் மொழி, மானிடவியல் ஆகிய துறைகளில் புலமை வாய்ந்தவராகவும் காணப்பட்டிருந்தார். மாக்கியவல்லியின் காலத்திற்கு இத்துறைகளில் புலமை பெறுவது அவசியமானதாகவும்,பெறுமதி வாய்ந்ததாகவும் கருதப்பட்டிருந்தது. மாக்கியவல்லி தனது 29வது வயதில் Florentine குடியரசின் இரண்டாவதுChancellor பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதுடன் வெளிவிவகாரங்களுடன் தொடர்புடைய விடயங்களுக்கு பொறுப்பாகவும் இருந்தார். இது மாக்கியவல்லி அரசியல் பற்றிய தெளிவினை பெறுவதற்கு பெரிதும் உதவியிருந்தது. 1512 ஆம் ஆண்டு புளோரன்ஸ் குடியரசு குழப்பமடைந்ததுடன், மாக்கியவல்லியின் தொழிலும் சிக்கலடைந்தது. 1512ஆம் ஆண்டு கார்த்திகை பதவியிலிருந்து விலக்கப்பட்ட மாக்கியவல்லி, 1513ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை பெற்றுக் கொண்ட மாக்கியவல்லி சிறை வாழ்க்கைக்கு பிந்திய நாட்களை தனது ஓய்விற்காக பயன்படுத்தினார். இவ் ஓய்வு காலத்தில் தனது இராஜதந்திர அனுபவங்கள், வரலாறு ஆட்சியாளனுக்கு இருக்கக் கூடிய இயல்புகள் என்பவைகள் தொடர்பாக ஆய்வு செய்திருந்தார்.
மாக்கியவல்லியின் ஆய்வு நூல்களில் Prince’, ‘Discourse’ ஆகிய இரு நூல்களும் மிகவும் பிரபல்யமானதுடன் இவருடைய அனுபவத்தில் இருந்து பிறந்தவைகளுமாகும். 1513ஆம் ஆண்டு நடுப்பகுதியில் Princeஎன்ற நூலை எழுதியிருந்தார். மிகவும் அர்ப்பணிப்புடனும், கவனத்துடனும் எழுதப்பட்ட இந்நூல் ஆட்சியாளனுக்கு ஆலோசனை வழங்குகின்ற நூலாகவே இருந்நது. ‘Discourse’ என்ற நூலில் குடியரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கை ஒன்றிற்கு வருவதனூடாக கலப்பு அரசாங்கம் ஒன்றை உருவாக்க மாக்கியவல்லி முற்படுகின்றார். இந்நூல் பெருமளவிற்கு புளோரன்ஸ் நகரத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டிருந்தது. ஆயினும் 1512ஆம் ஆண்டு The Art of War என்ற நூல் ஒன்றை இதற்கு முதல் மாக்கியவல்லி எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக மாக்கியவல்லியின் அனேக எழுத்துக்களுக்கான சரியான காலம் இன்றுவரை தர்க்கத்திற்குரியதாகும்.
மறுமலர்ச்சியும் இத்தாலியும்
பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி ஏனைய ஐரோப்பிய நாடுகளை பாதித்தது போன்று இத்தாலியையும் பாதித்தது. மறுமலர்ச்சியானது மானிடத்தின் மறுபிறப்பாகவே நோக்கப்படுகின்றது. மனிதன் தனது புதிய வாழ்க்கைக்கு மீளவும் திரும்புவதாக இக்காலத்தினை குறிப்பிடுவது மிகவும் சிக்கலான ஒன்றாகவே இருந்தது.
மறுமலர்ச்சியானது தனிமனித சுதந்திரத்தினை முதன்மைப்படுத்தியதுடன் மனிதனின் சிறப்பினையும் உலகத்தின் புகழையும் முதன்மைப்படுத்தியது. மனிதன் தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வதை விரும்புகின்றவனாக காணப்பட்டான். மனிதன் கிறிஸ்தவ சமய செல்வாக்கில் இருந்து விடுபட்டு இயற்கை நோக்கியும், சுயமுயற்சி, சுயசிந்தனை என்பவைகள் நோக்கியும் நகர்வதில் நாட்டம் உள்ளவனாக காணப்பட்டான். இக்காலம் மானிடத்துவம் முதன்மைப்படுத்தப்பட்ட காலமாகும். மானிடத்துவம் முதன்மைப்படுத்தப்பட்டமை நவீன உலகின் பெரும் பலமாக உணரப்பட்டது. கிறிஸ்தவ சமயமும், தேவாலயமும் போதித்த மானிட வாழ்வின் பயனற்ற தன்மை, துன்பம், அடக்கம், வறுமை, துறவறம், என்பவற்றை எதிர்த்து மறுமலர்ச்சிக்காலம் மானிடத்தின் உயர்தன்மை, கௌரவம், என்பவற்றை உறுதிப்படுத்தியது. இதன்மூலம் மனிதன் சிந்திக்கும் சுதந்திரத்தை, விசாரிக்கும் சுதந்திரத்தை, வினா எழுப்பும் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டான். இச்சுதந்திரங்கள் உலகின் புதிய மனிதனை தோற்றிவித்தது. சமய விசுவாசம் என்பதற்கு அப்பால் தனிமனிதனின் சுய யதார்த்தம், மகிழ்ச்சி, புகழ், பெருமை என்பன முதன்மைப்படுத்தப்பட்டன.
மேலும் சமய சார்பற்ற அரசு என்ற எண்ணக்கரு பிரதான அரசியல் அலகாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தேசியரசு என்பது ஒரு புலக்காட்சிக்குட்பட்டது என்பதுடன் அரச இறைமை என்ற எண்ணக்கருவும் முதன்மையடைந்தது. இவற்றினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் நாடுகாண்பயணங்களும், புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டமையும் நடைபெற்றன. புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை வர்த்தகம், பொருளாதார அபிவிருத்தி, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி, மானிடம் நோக்கிய தத்துவங்கள் அபிவிருத்தியடைவதற்கு உதவின. அச்சு இயந்திரம், அச்சுப் பதிப்பு, நூலகம், பல்கலைக்கழகம், போன்றவற்றின் தோற்றம், கல்வியறிவில் மாற்றத்தினை ஏற்படுத்த கல்விப்புரட்சி நிகழ்ந்நது. கல்விப்புரட்சியானது பழமையான மொழிகளாகிய கிரேக்க, இலத்தீன், மொழிகளிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மறுமலர்ச்சியானது இத்தாலியின் பழைய வர்த்தக, பொருளாதார முறைமைகளை இல்லாதொழித்ததுடன் புதிய வர்த்தக, பொருளாதார முறைமைகளையும் தோற்றிவித்தது. அத்துடன் மறுமலர்ச்சியின் தாக்கம் இத்தாலியின் சமூக, அரசியல் நிறுவனங்களிலும் பிரதிபலித்தது. இத்தாலி அரசியல் ரீதியாக Naples, Milan, Venice, Florence, Papal என ஐந்து பெரும் அரசுகளாக பிரிக்கப்பட்டிருந்தன. ஐக்கிய இத்தாலியினை உருவாக்கக் கூடிய அதிகாரம் யாரிடமும் காணப்பட்டிருக்கவில்லை.
ஐந்து அரசுகளும் வௌ;வேறு திசைகளில் சென்றதுடன் சர்வாதிகாரப் போக்குடனும் செயற்பட்டன. இத்தாலியில் ஒற்றுமை காணப்படாமையால் அச்சுறுத்தலும், ஆக்கிரமிப்பும், எப்போதும் இருந்து வந்ததுடன், இதிலிருந்து மீளுகின்ற ஆர்வமும் இருக்கவில்லை. இது பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், போன்ற நாடுகளின் ஏகாதிபத்திய அபிலாசைகளுக்கு இத்தாலி விட்டுக் கொடுக்கின்றதாக இருந்தது. இத்தாலி இவ்வாறு பலவீனப்பட்டு இருக்கும் போது திருச்சபையும், பாப்பாண்டவரும், தம்மை மேலும் பலமான நிலையில் நிலைநிறுத்தி வைத்துக் கொள்வதிலேயே முழு முயற்சில் ஈடுபட்டனர். பாப்பாண்டவரினதும், திருச்சபையினதும் இச் செயற்பாடு மாக்கியவல்லிக்கு வெறுப்பினை ஏற்படுத்தியது. மாக்கியவல்லி திருச்சபைக்கும், பாப்பாண்டவருக்கும் எதிரான கருத்துக்களை உருவாக்கி திருச்சபையின் பிடியிலிருந்து இத்தாலியை மீட்க விரும்பினார்.
தற்பெருமையும் (Ego) மனிதனும்
மாக்கியவல்லியின் கருத்துப்படி மனிதர்கள் அடிப்படையில் பலவீனமானவர்களாகவும், இழிவானவர்களாகவுமே காணப்படுகின்றார்கள். நன்றியில்லாதவர்களாகவும், வஞ்சனை மிக்கவர்களாகவும், அச்சம் நிறைந்தவர்களாகவும், அபாயத்தினை சந்திக்க தயங்குகின்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள். மனிதர்களது மன விருப்பங்கள் நிறைவற்றனவாகவும், மனதில் திரும்பத் திரும்ப இவ்விருப்பங்கள் வருகின்றவைகளாகவும் காணப்படுகின்றன. அடிப்படையில் மனித இயல்பு சுயநலமானதும், தற்பெருமை மிக்கதுமாகும். மனித வாழ்க்கை அடிப்படையில் மிருகங்களின் வாழ்க்கை போன்றதாகும். ஆனால் தமது பாதுகாப்பு கருதி சர்வதேச ரீதியாக தமக்கிடையில் ஐக்கியப்படல் வேண்டும் என எண்ணுகின்றார்கள். ஒழுக்கக் கேடானது, தீயது என்பவற்றிலிருந்து நல்லது நேர்மையானது எனக் கருதப்படுகின்றவைகளை தரம் பிரித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் மனிதர்களிடம் காணப்படுகின்றது. ஆயினும் ஒழுக்கமற்றவர்களாகவே மனிதர்கள் வாழ்கின்றார்கள். சமூகத்தில் நல்லதை செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்படுவதால் தமது ஒழுக்கமற்ற பண்பை மனிதர்கள் மறைக்கின்றார்கள் என மாக்கியவல்லி வாதிடுகின்றார்.
மனிதன் சமூக விரோதியாகவும், நேர்மையில்லாத் தன்மை கொண்டவனாகவும்,அராஜகம், பணப்பேராசை, காமவெறி போன்ற குணாம்சங்கள் கொண்டவனாகவும் காணப்படுகின்றான். சொத்துக்களை கைப்பற்றிக் கொள்வதற்காக தனது தந்தையினை கூட கொலை செய்வதை ஏற்றுக் கொள்ளுகின்ற மன உணர்வு கொண்டவனாக மனிதன் காணப்படுகின்றான். மனிதனது நாட்டமெல்லாம் அதிகாரம், சொத்து, புகழ் இம்மூன்றினையும் எவ்வாறான வழிவகைகளை பின்பற்றியாவது தேடுவது, அடைவது என்பதாகவே உள்ளது. இதனால் மனிதன் ஆக்கிரமிப்பு, சட்ட விரோதமாக கைப்பற்றுதல், போன்ற மன உணர்வினால் தூண்டப்படுகின்றவனாக காணப்பட்டான். மனித வாழ்க்கை அராஜகம், முரண்பாடு என்பவற்றினால் தீர்மானிக்கப்பட்டன. வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு வரையறையற்ற விருப்பங்களை, தேவைகளை, நிறைவேற்ற வேண்டியிருந்தது. மக்களின் சந்தோசமான மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக மாறியது. இது சமூக வாழ்க்கையில் அதிருப்தியை ஏற்படுத்த சமூக முரண்பாடு, அராஜகம் என்பன முதன்மையடையலாயிற்று என மாக்கியவல்லி கூறுகின்றார். மனிதனிடம் நேர்மையினையும், நீதியையும் அடிப்படையில் ஏற்படுத்த வேண்டுமாயின் ஒழுக்கம் நிறைந்த ஆட்சியாளனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். இவ்வாட்சியாளன் மனிதர்களுக்கிடையில் பலமும், துணிவும் உள்ள தலைவனாகவும், ஆட்சியாளனாகவும், உருவாக வேண்டும் என மாக்கியவல்லி வாதிடுகின்றார்.
இளவரசனும்ஆட்சிக்கலையும்
வரலாற்றிற்கு ஊடாகவே மாக்கியவல்லி தனது சிந்தனைகளை முன்வைக்கின்றார். வரலாறு என்பது அவருக்கு கற்றுக் கொடுக்கும் ஆசானாக காணப்பட்டது. இதனால் வரலாற்றினை விரும்பிக் கற்கின்றவராக இவர் காணப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நிகழும் என்பதற்கு அப்பால் எதிர்காலத்திற்கான முன்னோக்கிய பாய்ச்சலாகும். வரலாற்று மாற்றங்கள் அபிவிருத்திப் பாதையின் படிக்கற்களாகும் என்பது இவரது கருத்தாகும். வரலாறு மனித வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்துடனும் தொடர்புடையது என்பதால் ஆட்சியாளனின் ஒவ்வொரு செயற்பாட்டுடனும் வரலாற்றினை தொடர்புபடுத்துபவராக மாக்கியவல்லி காணப்படுகின்றார்.
ஆட்சியாளனின் சட்டங்கள் அரசியலுக்கு ஆரோக்கியத்தினையும், தெளிவினையும், தருவதாக இருக்க வேண்டும். ஊழல் கொண்ட சமுதாயம் ஒரு போதும் தானாகத் திருந்தமாட்டாது. எனவே அதனை திருத்துவதற்கு ஆட்சியாளனே முயற்சி எடுக்க வேண்டும். வெற்றிகரமான அரசு ஒன்றினை உருவாக்க தனிமனிதனே முயற்சிக்க வேண்டும். மக்களின் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டே சட்டங்களும், ஆட்சியும் உருவாக்கப்படல் வேண்டும். ஆட்சியாளன் புதிய அரசை உருவாக்கவும்,பழைய அரசை புதிப்பிக்கவும், பழைய அரசாங்கத்தினை புதிப்பிக்கவும் முயற்சிப்பவனாக இருக்க வேண்டும். ஆட்சியாளன் அரசை உருவாக்குகின்ற கலைஞன் மட்டுமல்ல. சமுதாயத்தினை, பொருளாதாரத்தினை,சமயத்தினை உருவாக்குகின்ற கலைஞனாகவும் இருக்க வேண்டும். பலமான அரசு ஒன்று உருவானால்த்தான் பொதுவிவகாரங்களில் மக்கள் பங்குபற்ற முடியும். குடியரசு ஒன்றில் தான் தாராண்மை என்பது சாத்தியமானதாகும். நாட்டுபற்று உள்ளவர்கள் தான் உண்மையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்களால் தான் தாராண்மை பாதுகாக்கப்படும். அரசு அயலவர்களை தொடர்ந்து அவதானித்து வரவேண்டும். அயலவர்களிற்குள் அரசின் குறிப்பிட்ட எதிரி காணப்படுவான். இவ் எதிரியை அழிப்பதற்காக அரசு தனது அதிகாரத்தினையும், நிலப்பரப்பினையும் அதிகரிக்க கட்டாய முயற்சி செய்ய வேண்டும். இவ்விடத்தில் அரசை மாக்கியவல்லி வரைவிலக்கணப்படுத்தும் போது “பாதுகாப்பினைப் பேணுவதற்காக பலத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டதே அரசு” என்கின்றார்.
அரசு பலம் பெறுவதற்கு இராணுவத்தின் முக்கியத்துவத்தினை மாக்கியவல்லி எடுத்துக் காட்டுகின்றார். சிறப்பானதும், பலமானதுமான அரசு மக்கள் இராணுவத்தினை கொண்டிருக்குமாயின் அது வெற்றிகரமாக செயற்படமுடியும். அரசு பலம் பெறுவதற்கு மக்கள் இராணுவ அமைப்பை சிறப்பாக கட்டியெழுப்ப வேண்டும். மக்கள் இராணுவம் அரசு ஒன்றின் பிரதான தூணாகும். இதற்காக மக்களில் 17 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள் அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி வழங்கப்பட வேண்டும். இவர்கள் இராணுவ நுட்பங்கள் யாவும் கற்றவர்களாகவும், உளவியல் ரீதியாக எவ்வேளையிலும் யுத்தத்தினை சந்திக்க தயாரானவர்களாகவும் இருக்க வேண்டும்.
திறமை வாய்ந்ததும், சிறப்பான ஒழுக்கம் நிறைந்ததும், கீழ்படிவினைக் கொண்டதும், ஆயுதங்களைக் கொண்டதுமான இராணுவக் கட்டமைப்பினை உருவாக்கி பராமரிக்க வேண்டியது ஆட்சியாளனின் கடமையாகும். மிகவும் சிறப்பாக பயிற்றப்பட்ட இராணுவத்தினை கொண்டிருக்கும் அரசு, தனது அயலவர்களிலிருந்தும் ஏனைய ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட அரசுகளிலிருந்தும் எழும் அச்சுறுத்தல்களை முறியடிக்க முடியும் என மாக்கியவல்லி ஆலோசனை கூறுகின்றார். மாக்கியவல்லி இது தொடர்பாக மேலும் கூறும்போது “ ஒவ்வொரு அரசினதும் பிரதான அடித்தளமாக சிறப்பான சட்டங்களும், சிறப்பான ஆயுதங்களுமே இருக்க வேண்டும். அரசு ஒன்று சிறப்பான சட்டங்களினையும், சிறப்பான ஆயுதங்களினையும் கொண்டிருக்காவிட்டால் எங்கே சிறப்பான சட்டங்களும் ஆயுதங்களும் காணப்படுகின்றனவோ அதனை தவிர்க்கமுடியாது பின் தொடர வேண்டி ஏற்படும்” என்கின்றார்.
அதிகாரமும் ஆட்சியாளனும்
மாக்கியவல்லி இளவரசனுக்கு அதிகாரத்தினை எவ்வாறு பேணுவது என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்குகின்றார். ஆட்சியாளன் பெருந்தன்மையுடனும் தாராண்மைச் சிந்தனையுடனும் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். எப்பொழுது எது அவசியமோ அதனை வெளிப்படுத்தக் கூடிய பலமுடையவனாக ஆட்சியாளன் இருக்க வேண்டும். அரசு ஒன்றினை பலம், பாதுகாப்பு, திறமை, நீடிப்பு என்பவற்றுடன் ஆளுவது இளவரசனின் பொறுப்பாகும். எவ்வேளையிலும் பிறரைவிட உயர்நிலையினை எடுக்கக் கூடியவனாகவும், எதனையும் தொடக்கி வைக்கக் கூடியவனாகவும் ஆட்சியாளன் இருக்க வேண்டும். பயம் என்பது தெரியாதவனாக இருக்க வேண்டும். பயம் தெரியாதவனாக இருந்தால்தான் ஆட்சியாளன் மீது பயபக்தி மக்களுக்கு ஏற்படும். ஆளுவதற்கான வழிமுறைகளை தெரிவு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்துக்களையும், பெண்களையும் தனக்காக தேடுவதை விரும்பக் கூடாது. இவைகளில் ஆட்சியாளன் நாட்டமுள்ளவனாக இருந்தால் மக்களின் ஆதரவை இழப்பதுடன் மக்களில் தங்கியிருக்க வேண்டியும் ஏற்படும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றி நற்குணத்துடனும், கொடூரத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். தனக்கு உதவியாக அலுவலர்களையும், ஆலோசகர்களையும், தெரிவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். தனக்கு கீழ்படிய மறுப்பவர்களை கட்டுப்பட மறுப்பவர்களை தெரிவு செய்யக் கூடாது.
ஆட்சியாளன் தனது நிலப்பிரதேசத்தினை விஸ்தரிக்க முயற்சி செய்த வண்ணம் இருக்க வேண்டும். பலவீனமான அரசுகளை தாக்குகின்றவனாகவும், பலவீனமான அரசுகளுடன் கூட்டுச் சேர்ந்து ‘அதிகாரச் சமநிலையினை’ பேணுகின்றவனாகவும் இருக்க வேண்டும். ஆட்சியாளன் ஒரு போதும் தனித்து இயங்குகின்ற கொள்கையினை பின்பற்ற முயற்சிக்கக் கூடாது. கூட்டாக இயங்குகின்ற கொள்கையினை எப்போதும் பின்பற்றுகின்றவனாக இருக்க வேண்டும். உள்நாட்டு மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும், ‘நடுநிலை வகித்தல்’ என்ற கொள்கையினை உருவாக்கி பின்பற்றுதல் என்பது சாத்தியமற்றதாகும். எனவே தான் மாக்கியவல்லி ‘சிறப்பான பக்கத்தில் சாய்ந்திருப்பது எப்போதும் சிறப்பானது’ என்ற கருத்தினை முன்வைக்கின்றார்.
மாக்கியவல்லி சட்ட ரீதியற்ற வன்முறைகளை உத்தியோகபூர்வமாக அழிப்பதற்கான ஆலோசனைகளையும் இளவரசனுக்கு வழங்குகின்றார். இளவரசன் இரக்கமற்றவனாக இருக்க வேண்டும். இது தொடர்பாக மாக்கியவல்லி கூறும் போது “ சிங்கத்தைப்போல் பலத்துடனும் நரியை போல் தந்திரத்துடனும்” இளவரசன் செயற்படல் வேண்டும்.
துணிவு, வீரம், தந்திரம், கூர்மையான மதிநுட்பம் போன்ற பண்புகள் கொண்டவனாக இளவரசன் காணப்படல் வேண்டும். இவைகள் யாவும் அதிகாரப் போராட்டத்தில் ஒரு ஆட்சியாளனுக்கு அவசியமானதாகும். ஆட்சியாளன் போதிய துணிச்சலுடன் தனது எதிரியுடன் யுத்தம் புரிய வேண்டும். பொறிகளை வைக்கக் கூடிய தந்திரம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். துணிவு, தந்திரம், இவைகள் இரண்டும் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு ஆட்சியாளனுக்கு அவசியமானதாகும்.
முடிவுரை
மாக்கியவல்லியின் கோட்பாடுகள் வரலாற்றினையும் உளவியலையும் அடிப்படையாகக் கொண்டதாகும். மாக்கியவல்லியின் அவதானத்தின்படி எல்லாம் சூழ்நிலைகளாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. மனமாற்றங்களுக்கான உந்துதலை உளவியலே கொடுக்கின்றன. அதாவது துணிவுடன் செயற்படுவதா? தந்திரத்துடன் செயற்படுவதா? என்பதை உளவியல் அம்சங்களே தீர்மானிக்கின்றன.
ஆயினும் மாக்கியவல்லி மனிதனின் உளவியல் தொடர்பாக கூறும் கருத்துக்கள் விவாதத்திற்குரியதாகும். மனிதன் தொடர்பாக தவறான கருதுகோள் ஒன்றினை உருவாக்கி நிரூபிக்க மாக்கியவல்லி முற்படுகின்றார் என்ற விமர்சனங்கள் உள்ளன. மனிதனுடைய நற்குணங்களை இனங் காணத்தவறும் மாக்கியவல்லி யுத்தத்தினாலும், ஆயுதமுனையிலும் ஆட்சி செய்ய முற்படுவது ஏற்றுக் கொள்ளமுடியாத சர்வாதிகாரக் கருத்தாகவே உள்ளது.
மாக்கியவல்லி அரசையும், ஆட்சியாளனையும் பலம், அதிகாரம் என்ற நோக்கிலேயே பார்க்கின்றார். இவரைப் போன்று இவருக்குப் பிற்பட்ட காலத்திலும் அரசையும், ஆட்சியாளனையும் அதிகார நோக்கில் பலர் பார்த்துள்ளனர்.
17ம் நூற்றாண்டில ஹெப்ஸ், ஹரிங்டன் (Hobbes, Harrington)போன்றோர்களும், 18ம் நூற்றாண்டில் ஹமில்டன், மடிசன் (Hamilton, Madison) போன்றோர்களும், 19ம் நூற்றாண்டில் மொஸ்கா, பரெரோ (Mosca, Pareto) போன்றோர்களும் 20ம் நூற்றாண்டில் லாஸ்வெல், கப்லன், ரோபேர்ட் டால் (Lasswell, Kaplan, Robert Dhal) போன்றோர்களும் அதிகாரத்தினை மையமாகக் கொண்டே தமது சிந்தனைகளை உருவாக்கியிருந்தார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாக்கியவல்லியின் சிந்தனைகள் இரு பெரும் சர்வாதிகாரிகளால் பின்பற்றப்பட்டிருந்தன. இத்தாலியினை 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி செய்திருந்த முசோலினி (Mussolini) “ நான் மாக்கியவல்லியின் இளவரசனை நம்புகின்றேன். அது ஆட்சியாளனுக்கான உயர் வழிகாட்டியாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார். சீனாவின் மாக்சிச புரட்சியாளராகிய மாவோ சேதுங் துப்பாக்கி குழலிலிருந்தே அதிகாரம் பிறக்கின்றது (Power comes from the barrel of a gun)என்று கூறுவதன் மூலம் யுத்தத்தினையும், பலத்தினையும் அதன்மூலம் அதிகாரத்தினை தேடுகின்றவராகவும் காணப்பட்டிருந்தார். ஆனால் யுத்தங்கள் பெரும் அழிவினையும், இரத்தக்களரியினையுமே ஏற்படுத்தியிருந்தது. யுத்தமும் ஆயுதமும் உலகை ஆட்சி செய்ய முடியாது என்பதே யதார்த்தமாகும்.

ஜீன் ஜக்கியூஸ் ரூசோ

clip_image002
ஜீன் ஜக்கியூஸ் ரூசோ 1712 ஆம் ஆண்டு ஆனிமாதம் 28ம் திகதி சுவிற்சர்லாந்தில் ஜெனிவா நகரத்தில் பிறந்தார். இவர் பிறந்து சிறிது காலத்தில் இவரது தாயார் காலமாகிவிட்டார். தந்தை கடிகாரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது பத்தாவது வயதில் தந்தையார் தன்மீது சுமத்தப்பட்ட சிறிய குற்றச் செயலுக்குப் பயந்து ஜெனிவாவினை விட்டு வெளியேறியிருந்தார். இக்காலத்தில் ரூசோ சிறிய தந்தையுடன் வளர்ந்து வந்தார். பதினாறாவது வயதில் ஜெனிவாவினை விட்டு ரூசோ வெளியேறினார். பின்னர் இடத்திற்கு இடம் மாறி வாழ்ந்து இறுதியில் 1742ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பரீஸ் நகரத்தில் குடியேறினார். 1749 ஆம் ஆண்டு டிஜோன் கல்விக்கழகம் நடத்திய கலைகளும் விஞ்ஞானமும் அபிவிருத்தியடைந்திருப்பதால் ஒழுக்கம் உயர்வடைந்திருக்கின்றதா? அல்லது வீழ்ச்சியடைந்திருக்கின்றதா? என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் அவருக்கு முதலாம் இடத்திற்கான பரிசு கிடைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து 1755 ஆம் ஆண்டு Discourse என்னும் நூலையும், பின்னர் எமிலி என்னும் (கல்வித்திட்டம்) என்னும் நூலையும் எழுதியிருந்தார். 1762 ஆம் ஆண்டு சமூக ஒப்பந்தம் (Social Contract) என்னும் நூலை எழுதியிருந்தார். ரூசோவின் எழுத்துக்கள் பிரான்சியப்புரட்சிக்கு தூண்டுதலாக இருந்ததோடு இந்நாட்டின் மறுமலர்ச்சிக்கும் காரணமாக இருந்தது. 1788 ஆம் ஆண்டு வறுமை, நோய் காரணமாக ரூசோ மரணமடைந்தார்.
பலம்அடிமைத்தனம்
“மனிதன் பிறக்கும் போது சுதந்திரம் உள்ளவனாகவே பிறக்கின்றான். ஆனால் எங்கு பார்த்தாலும் அவன் அடிமைத் தளைகளால் பிணைக்கப்பட்டவனாக காட்சியளிக்கின்றான்”என ரூசோ கூறுகின்றார். ஒவ்வொரு மனிதனும் தான் மற்றவனுக்கு எஜமானன் என எண்ணுகின்றான். ஆனால் அப்படி எண்ணுபவன் மற்றவர்களை விட பெரிய அடிமையாக இருக்கின்றான். இக்குழப்ப நிலை எவ்வாறு உருவாகியது? இதற்கு தனக்கு விடை தெரியாது? ஆனால் இதனை மாற்றியமைக்கத் தன்னால் முடியும் எனக் கூறுகின்றார். சமுதாய ஒழுங்கு என்பது புனிதமான உரிமையாகும். இது மற்றெல்லா உரிமைகளுக்கும் அடிப்படையானதுமாகும். இந்த உரிமை இயற்கையிலிருந்து தோன்றியதல்ல. இந்த உரிமை சம்பிரதாயத்திலிருந்து தோன்றியதாகும்.
பலமுடையவன் தனது பலத்தின் மூலம் எப்போதும் பிறர் மீது ஆதிக்கம் செலுத்தி வாழமுடியாது. இவ்வாறு ஆதிக்கம் செலுத்துவானாயின் ஆதிக்கம் செலுத்துவதை தனது உரிமையாகவும், அடங்கி நடப்பதை கடமையாகவும் மாற்ற வேண்டும். பலாத்காரம் என்பது ஸ்தூல சக்தியாகும். அதன் அதிகாரத்திற்கு அடங்கி நடப்பது மனப்பூர்வமானதல்ல. தேவையைப் பொறுத்ததேயாகும். எனவே அதனைக் கடமையென்று கூறமுடியாது. பலாத்காரத்தினால் ஏற்படக்கூடிய இப்போலித்தனமான உரிமையினால் தீமையும், அறியாமையும் தான் உருவாக முடியும். மக்கள் கட்டாயப்படுத்தப்படாமல் விடப்படுவார்களாயின் போலித்தனமாக கீழ்படிந்து நடக்கவேண்டிய தேவை இல்லாது போய்விடும். எனவே பலாத்காரத்திற்கும் உரிமைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
எந்த தனிமனிதனும் சகோதர தனிமனிதன் மீது அதிகாரம் செலுத்த வேண்டியதில்லை. பலாத்காரத்திற்கு உரிமையும் கிடையாது. சம்பிரதாயங்களே சட்ட ரீதியான அதிகாரங்கள் அனைத்திற்கும் அடிப்படையானதாகும். குரோஸியஸ் கூறும் “தனிப்பட்ட மனிதன் தனது சுதந்திரத்தை தன்னுடைய எஜமானிடம் பாரதீனப்படுத்தி விட்டு அடிமையாவது போன்று, முழு மக்கள் கூட்டமும் தங்கள் சுதந்திரத்தை பாரதீனப்படுத்தி விட்டு அரசனுக்கு அடிமையாகி விடவேண்டும்” என்ற கருத்தை ரூசோ நிராகரிக்கின்றார். ரூசோவின் பார்வையில் பாரதீனப்படுத்துதல் என்றால் விற்றுவிடுவதாகும். தனிமனிதன் எஜமானிடம் தனது சுதந்திரத்தை பாரதீனப்படுத்துதல் என்பது வயிற்றுப் பிழைப்பிற்கானதாகும். ஆனால் முழு மக்கள் கூட்டமும் தங்களை ஏன் விற்றுக் கொள்ள வேண்டும் என ரூசோ கேள்வி எழுப்புகின்றார்.
ஒரு மனிதன் எவ்வித நன்மையுமில்லாமல் தன்னைப் பிறிதொரு மனிதனிடத்தில் பாரதீனப்படுத்திக் கொள்கின்றான் என வாதிடுவது தவறானதாகும். இவ்வாறு செய்பவன்; தனது சுய அறிவை இழந்தவனாகும். இதேபோன்று முழு மக்கள் கூட்டமும் எவ்வித நன்மையும் இல்லாமல் தங்களை ஒரு அரசனிடம் பாரதீனப்படுத்திக் கொள்வதும் அர்த்தமில்லாததாகும். தனிமனிதன் தன்னைப் பிறிதொருவருக்கு அடிமைப்படுத்திக் கொண்டாலும் தன் பிள்ளைகளை அடிமைப்படுத்திப் பராதீனப்படுத்திக் கொள்ள அவனுக்கு உரிமை கிடையாது. ஒரு அரசாங்கம் தர்மம், நீதி அடிப்படையில் இயங்குவதற்கு அதன் ஆட்சியை ஒப்புக்கொள்ளவோ, நிராகரிக்கவோ அதன் ஒவ்வொரு தலைமுறைக்கும் உரிமை வழங்க வேண்டும்.
குரோஸியஸ் கூறும் “ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடிமைப்படுத்திக் கொள்ள உரிமையுண்டு எனும் கொள்கை யுத்தத்திலிருந்து பிறந்தது” என்னும் கருத்தை ரூசோ மறுக்கின்றார். யுத்தம் என்பது தனியொரு மனிதனுடன் தொடர்புடைய விடயமல்ல. யுத்தத்தில் தோல்வியடைந்தவர்களை கொலை செய்வதற்கு வெற்றி பெற்றவர்களுக்கு என்றைக்கும் உரிமை கிடையாது. கொலை செய்வதற்கு உரிமை இல்லையாயின் அடிமையாக்குவதற்கும் உரிமையில்லை. யுத்தத்தில் தோல்வியடைந்தவர்களை கொலை செய்யாது அதற்குப் பதிலாக அவர்களின் சுதந்திரத்தை பறித்துக் கொள்வதும் நியாயமற்றதாகும். அடிமைப்படுத்தும் எந்த உரிமையும் நியாயமற்றது, முறையற்றது கேவலமானதாகும். அடிமைத்தனம், உரிமை ஆகிய இரண்டு சொற்களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவைகளாகும். முழுவதும் உன் செலவில்,முழுவதும் என் நன்மைக்காக என் விருப்பப்படி உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்கின்றேன். எனக்கு விரும்பிய காலம் வரை அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி வருவேன். நீயும் அதேபோன்று எனக்கு விரும்பிய காலம் வரை நடைமுறைப்படுத்தி வரவேண்டும் என ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனைப் பார்த்தோ அல்லது ஒரு அரசன் மக்களை (தேசத்தை) பார்த்து இவ்வாறு கூறுவானாயின் அது பெரும் முட்டாள்தனமாகும்.
குடும்பம்
சமுதாயங்களில் மிகவும் பழமையானதும், இயற்கையானதுமான நிறுவனம் குடும்பம் என்ற நிறுவனமேயாகும். குடும்பம் என்ற நிறுவனத்தில் தமக்குப் பாதுகாப்பும்,நலனும் தேவைப்படும் வரையில்தான் பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் (தந்தை,தாய்) அன்பு செலுத்தி வாழ்கின்றார்கள். இது இயற்கையான பந்தமாகும். இத்தேவைகள் முடிவடைந்த பின்னர் இவ் இயற்கையான பந்தம் அறுபட்டு விடுகின்றது. இதன்பின்னர் தம் பெற்றோருக்கு கீழ்படிந்து நடக்க வேண்டிய பிள்ளைகளுக்கும், தம் பிள்ளைகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டிய தேவை பெற்றோருக்கும் இல்லாமல் போய்விடுகின்றது. இருதரப்பும் சுதந்திரமாக வாழ ஆரம்பித்து விடுவதுடன், சம அந்தஸ்தும் அடைந்து விடுகின்றனர். இதற்குப் பின்னரும் இரு தரப்பினரதும் (பிள்ளைகள் – பெற்றோர்) உறவு நீடிக்குமானால் அது இயற்கைக்கு முரணானதாகும். அது வலிய ஏற்படுத்திக் கொண்ட உறவாகும்.
பிள்ளைகளும் பெற்றோரும் ஒருவர் மீது ஒருவர் தங்கி வாழ வேண்டிய தமது தேவை முடிவடைந்த பின்னர் தனிமைப்பட்டு சுதந்திரமாக வாழத் தொடங்கும் போது “பொது சுதந்திரம்” ஏற்பட்டு விடுகின்றது. பொது சுதந்திரமானது மனித சுபாவத்தின் இயற்கை நியதியாகும். தனது பாதுகாப்பிற்கும், நலனுக்கும் தேவையானவற்றை கவனிப்பதே மனிதனின் முதல் தேவையாகும். நல்லது, தீயது எவைகள் என்பதை பகுத்தறியும் சக்தி ஏற்பட்டுவிட்ட பின்னர் தனது நலனுக்குத் தேவையானவற்றை அவனே தீர்மானித்து விடுகின்றான். இந்த நிலையை அடையும் மனிதன் தனக்குத் தானே எஜமானனாகி விடுகின்றான்.
சமுதாயத்திற்கு பொதுச் சொத்துக்களும், அரசியல் அந்தஸ்த்தும் இருக்க வேண்டும். “ஒரு இனம் தன்னை தனியொரு எதேச்சதிகாரிக்கு பாரதீனப்படுத்திக் கொள்ளக் கூடும்” என்று குரோஸியஸ் கூறும் கருத்தினை ரூசோ விமர்சிக்கின்றார். ஒரு இனம் தன்னை பூரணமாக பாரதீனப்படுத்திக் கொண்ட பின்னர் தனது அந்தஸ்த்தினை இழந்து விடுகின்றது. எந்த சட்டத்தின் கீழ் எதேச்சதிகாரி தேர்ந்தெடுக்கப்படுகின்றாரோ அந்தச் சட்டத்தினை பரிசீலனை செய்வதற்கு முன்னர் எந்தச் சட்டத்தினால் குறிப்பிட்ட மக்கள் ஒரு இனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோ அந்தச் சட்டம் பரிசீலனை செய்யப்பட வேண்டும். ஏனெனில் இதுதான் முதன்முதலில் தோன்றிய சட்டமாகும். இதுவே சமுதாயத்தின் உண்மையான அடிப்படைச் சட்டமாகும்.
சமுதாய ஒப்பந்தம்
இயற்கை நிலையில் தனித்து வாழ்ந்த மனிதன் தொடர்ந்து அவ்வாறு வாழ்ந்து வரவில்லை. மனிதனின் பாதுகாப்பிற்கும், அபிவிருத்திக்கும் தடையாகவிருந்த யாவற்றையும் கடந்து வந்து விட்டான். மனித சமுதாயம் தன்னிடமுள்ள சக்திகளை ஒன்று திரட்டி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிதறிக்கிடக்கும் பல சக்திகளை ஒன்றுதிரட்டினால்த்தான் ஒரு புதிய கூட்டுச்சக்தி உண்டாகும். ஒவ்வொரு தனிமனிதனதும் சுக வாழ்விற்கு துணைக்கருவிகளாக இருப்பவை அவனுடைய சொந்தப் பலமும் சுதந்திரமுமேயாகும். அவற்றை அவன் பிறரிடத்தில் அடமானம் வைத்தால் தனக்குத் தானே கேடு தேடிக் கொள்கின்றான். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த நலனை நாடுகின்றவனாக இருந்தால் புதிய சமுதாயமும் புதிய கூட்டுச்சக்தியும் உருவாக முடியாது.
தனிமனிதனுடைய சொத்துக்களையும், சுதந்திரத்தையும் பிறர் அபகரித்துக் கொள்ளாத வகையில் பாதுகாக்க பலர் ஒன்று கூடி பரஸ்பரப் பாதுகாப்பில் பங்கு பற்றி வாழும் சமுதாயம் ஒன்று உருவாக்கப்படவேண்டும். இவ்வாறு ஒரு சமுதாயமாக சேரும் பொழுது எந்தத் தனிமனிதனும் தனக்கே சொந்தமான சுதந்திரத்தை இழந்துவிடாமலும், தன் ஒருவனுக்கே தான் கீழ்ப்படிகின்றவனாகவும் இருந்து சமுதாயத்தினைப் பாதுகாத்து வரவேண்டும். இத்தகைய மக்களின் கூட்டமைப்பிற்குரிய அடிப்படைப் பிரச்சினைக்கு தீர்வாக அமைவதுதான் சமுதாய ஒப்பந்தமாகும். இத்தகைய சமுதாய கூட்டமைப்பில் சமுதாயத்தின் பொதுநன்மைக்காக எல்லோரும் மனவிருப்பத்துடன் தமது உரிமைகளைப் பாரதீனப்படுத்துகின்றார்கள். இவ்வாறு எல்லா மனிதர்களும் ஒரேவிதமான பொதுவிதிக்கு ஏற்ப தமது உரிமைகளை சமுதாயத்தில் பாரதீனப்படுத்தி விடுகின்றனர். இதில் ஒரு சிலர் பிறருக்குப் பாதகமாக நடந்து கொண்டால் பரஸ்பரம் பாதகமாக நடந்து கொள்பவர் யார் என்று அவர்களுக்குத் தெரிந்துவிடும். தனிமனிதர்கள் மனம் விரும்பியே தங்கள் உரிமைகளை பொதுச்சமுதாயத்திற்கு பாரதீனப்படுத்திக் கொள்கின்றனர்.
தனிப்பட்ட மனிதன் தன்னுடைய நலனிற்காகவும், தனது உரிமைகளை மற்றவர்களைப் போன்று பாரதீனப்படுத்துகின்றான். எல்லோரும் பொதுச் சமுதாயத்தில் சரிசமமான உறுப்பினர்கள் ஆகிக்கொள்வதன் மூலம் தாம் இழக்கும் உரிமைகளுக்குப் பதிலாக அதிகமான சக்தியைப் பெறுகின்றனர். பொதுமக்களின் மேன்மையான அதிகாரத்திற்கு ஒவ்வொருவரும் தம்முடைய முழுச்சக்தியையும், தம்மையும் ஒப்படைத்து விடுகின்றனர். இதற்குப் பிரதிபலனாக ஒவ்வொரு உறுப்பினரும் பொதுஜன சக்தியின் பிரிக்கமுடியாத அங்கங்களாகிவிடுகின்றனர். இதுதான் சமுதாய ஒப்பந்தத்தின் அடிப்படைத் தத்துவமாகும். இத்தகைய சமுதாய ஒப்பந்தத்தின் கீழ் மனமும் உடலும் ஒற்றுமை கொண்ட உணர்ச்சியுள்ள மக்கள் சமூகம் உண்டாகின்றது. கூட்டமைப்பே சமுதாயத்தின் சக்தியாகவும், ஜீவனாகவும் அமைகின்றது. அது குடியரசு அல்லது சமுதாய ஸ்தாபனம் என அழைக்கப்படும். இக்கூட்டமைப்பு செயலாற்றும் போது அரசு என்றும், பிற அமைப்புக்களுடன் ஒப்பிடும்போது அதிகாரம் என்றும் அழைக்கப்படும். இக்கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களைக் கூட்டாக அழைக்கும்போது மக்கள் என்றும், தனிப்பட்ட முறையில் நகரமக்கள் என்றும், ஆட்சியின் சட்டதிட்டங்களுக்குட்படும் போது பிரஜைகள் என்றும் அழைக்கப்படுவார்கள்.
அரசு
சமூக ஒப்பந்தத்தில் அரசு தன்னுடைய உரிமைகளில் ஒரு பகுதியை பாரதீனப்படுத்தக் கூடாது. மற்றொரு அரசுக்கு கட்டுப்படவும் கூடாது. இவ்வாறு செய்தால் அரசு அழிந்து விடும். தனிநபர்களின் கூட்டுறவே சமூக ஒப்பந்தமாகும். இத்தனிப்பட்ட நபர்களிடமிருந்துதான் அரசு உருவாகின்றது. தனிப்பட்ட நபர்களின் நட்பும், அரசின் நன்மையும் ஒன்றாக இருக்க வேண்டுமேயோழிய ஒன்றுக்கொன்று பாதகமாக இருக்க கூடாது. சமூக ஒப்பந்தத்தின் விருப்பங்களுக்கு எவனொருவன் கீழ்படியாமலிருக்கின்றானோ அவனை கீழ்படிய வைக்க வேண்டும். அவன் இவ்வாறு செய்யாதிருப்பானாகில் அவன் சுதந்திரத்துடன் இருக்கமுடியாது.
சட்டம்
அரசியல் சமுதாயத்திற்கு இயங்கு சக்தியையும், உறுதியையும் கொடுப்பது சட்டமாகும். சட்டங்களின் உதவியில்லாமல் ஒரு சமூகம் ஒழுங்காக இயங்குவது கடினமாகும். எல்லா மக்களும் ஒன்று கூடி எல்லா மக்களுக்காகவும், ஒரு உத்தரவினை அமுலுக்குக் கொண்டுவந்தால் அந்த “உத்தரவு” எல்லா மக்களினதும் நன்மைக்கானதாகும். இதில் உத்தரவும், நோக்கமும் ஒன்றாகவேயுள்ளது. நோக்கமானது பொதுமக்களின் நன்மையைக் குறிப்பது போல உத்தரவும் அதேநோக்கத்தினை கொண்டிருக்கின்றது. இது போன்ற உத்தரவினைச் சட்டம் என்று கூறலாம். மக்களை ஒரு கூட்டமாகவும், அவர்களின் செயல்களை ஒரு தொகுப்பாகவும் வைத்து செயற்படுவது தான் சட்டமாகும். குறிப்பான தனிமனிதனுக்காகவோ, அவனின் செயலுக்காகவோ சட்டம் இயற்றப்படக்கூடாது. சில மக்களால் செய்யப்படுவது சட்டம் என்ற பெயரால் அழைக்கப்படக்கூடாது. பொதுமக்களின் அபிப்பிராயங்களின் கூட்டுத் தொகையே சட்டமாகும். ஆட்சியாளன் சட்டங்களுக்கு மேற்பட்டவனல்ல. ஆட்சியாளன் அரசின் பிரஜையாக இருப்பதால் அவனும் அரசின் சட்டங்களுக்க கட்டுப்பட்டவனாகும். ஆட்சியானது சட்டங்களுக்கு உட்பட்டிருக்குமானால் அது குடியரசாகும். மக்கள் சட்டங்களுக்கு கீழ்படிந்து வாழவேண்டும்.
சட்டங்களை உருவாக்குபவர்
நல்ல சட்டங்களை இயற்ற நல்ல அறிவாளி தேவைப்படுகின்றனர். மக்களின் நடத்தையினை, உணர்ச்சிகளை நன்றாகப் புரிந்து கொள்ளும் திறமை இவர்களுக்கு இருக்க வேண்டும். சட்டத்தினை ஆக்குபவர்கள் தமது சொந்த சுபாவங்களை சட்டத்தினை உருவாக்குவதற்கு உபயோகிக்கக் கூடாது. பொதுமக்களின் சுகவாழ்வே இவர்களின் எண்ணங்களாக பதிந்திருக்க வேண்டும். எதிர்கால மக்களின் நன்மைகளையும் இவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். மக்களுக்கு நன்மை தரக் கூடிய நிறுவனங்களை உருவாக்க முயல்பவன், மனிதர்களின் சுபாவங்களையும்,ஆற்றல்களையும் கொண்டவனாக இருக்க வேண்டும். தனிமைப்பட்டு வாழும் மனிதனை சமூகத்திற்கு பயனுள்ளவனாக மாற்ற முயல வேண்டும். சட்டத்தை உருவாக்குபவர்கள் மக்கள் மீது தமது ஆதிக்கத்தை பிரயோகிக்க முயற்சிக்க கூடாது. தமது சொந்த விருப்பு வெறுப்புக்களை தாம் இயற்றும் சட்டங்களில் புகுத்திவிடக்கூடாது. மக்களை ஆளுகின்ற அதிகாரியே சட்டங்களை இயற்றுபவனாக இருக்கக் கூடாது.

கால்மார்க்ஸ்

clip_image002
கால்மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்தவர். மெய்யியல், வரலாறு ஆகிய பாடங்களை ஜேர்மனியிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் கற்றிருந்தார். ஹேகலின் சித்தாந்தத்தினால் மிகவும் கவரப்பட்டிருந்தார். இவர் பத்திரிகைத்துறையிலும் ஆர்வமுடையவராக இருந்தார். இதனால் அரசாங்கத்தினால் பலவந்தமாக பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து பெல்ஜியத்திற்கும்,பின்னர் அங்கிருந்து 1849ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கும் நாடு கடத்தப்பட்டார். 1853ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இங்கிலாந்தில் வசித்திருந்தார்.
கால்மார்க்ஸ் பிரட்றிக் ஏங்கல்ஸ்ஸை பிரான்சில் சந்தித்தார். இவர் மிகவும் துடிப்புடைய இளைஞனாகவும், வேறுபட்ட சமூகத்திலிருந்தும் வந்திருந்ததுடன், இருவருக்கும் ஒருமித்த அரசியல் சிந்தனை இருந்திருந்தது. மாக்ஸ், ஏங்கல்ஸ் இருவரும் இணைந்து 1848 ஆம் ஆண்டு கம்யூனிச அறிக்கையினை வெளியிட்டனர்.
கால்மாக்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் கோட்பாடு, அரசியல் நடைமுறை ஆகிய இரண்டிற்குமிடையில் இணைப்பினை ஏற்படுத்திய முதன்நிலைக் கோட்பாட்டாளர்களாகும். இவர்கள் இருவரும் விஞ்ஞான பூர்வமானதும், புரட்சிகரமானதுமாகிய சோசலிசக் கோட்பாட்டை முன்வைத்தனர். கால்மாக்ஸ் 1848 ஆம் ஆண்டு வெளியிட்ட “கம்யூனிச அறிக்கையிலும், “மூலதனம்” என்ற நூலிலும் சோசலிசக் கோட்பாட்டை முன்வைத்துள்ளார். மூலதனம் என்ற நூல் சோசலிசத்தின் மூலாதார நூலாகக் கருதப்படுகின்றது. மூலதனம் என்ற நூலின் முதற்பகுதி 1867ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் அடுத்த இரண்டு பகுதிகளும் முறையே 1885ஆம் 1894ஆம் ஆண்டுகளில் பிரட்றிக் ஏங்கல்ஸினால் வெளியிடப்பட்டது. கால்மாக்ஸ் தனது நூலில் பொருள்முதல்வாதம், மூலதன செறிவாக்கல் விதி, வர்க்கப்போராட்டம் ஆகிய மூன்று முக்கிய விடயங்களைப் பகுப்பாய்வு செய்கின்றார்.
மிகைப்பெறுமானம் மாக்ஸிசக் கோட்பாட்டின் மையப்பகுதியாகும். டேவிட் றிகாடோவின் தொழிலாளர் கோட்பாட்டினால் கால்மாக்ஸ் கவரப்பட்டிருந்தார். முழுச்சொத்துக்களினதும் உண்மைப் பெறுமானம் தொழிலாளர்களினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது என்பதே கால்மாக்ஸின் வாதமாகும். அதேநேரம் முதல்தரப் பொருளியலாளர்கள் கூறும் ஒரு உற்பத்தி பொருளின் சந்தைப் பெறுமதி கேள்வி நிரம்பலினால் தீர்மானிக்கப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளும் கால்மாக்ஸ், நீண்ட காலத்தில் உற்பத்திக்குச் செலவிடும் நேரம், தொழிலாளர்களின் உழைப்பு, என்பவற்றினாலேயே உற்பத்திப் பொருட்களின் பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது எனக் கூறுகின்றார். அதாவது பொருள் உற்பத்தியில் தொழிலாளர்களின் உழைப்பு சக்தி பயன்படுத்தப்படும் போதுதான் உற்பத்திப் பொருளுக்கு பெறுமதி கிடைக்கின்றது. ஆகவே தொழிலாளர்கள் சமூகத்தின் முதுகெலும்பு எனக் கூறுகின்றார். இங்கு இரண்டு விடயங்கள் முக்கியம் பெறுகின்றன.
ஒன்று உற்பத்திக் கருவிகளாகிய தொழிற்சாலைகள், இயந்திரங்கள்,மின்சாரம், நீராவி வலு போன்றவற்றை இயக்குவதற்கு தொழிலாளர்கள் அவசியமாகும். தொழிலாளர்கள் இன்றி கருவிகள் தானாக இயங்கமாட்டாது.
இரண்டாவது உற்பத்திப்பொருட்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டாலே சந்தையில் விற்பனை செய்ய முடியும். இதற்கும் தொழிலாளர்களின் உழைப்புத் தேவையாகும்.
தொழிலாளர்களும் ஏனைய உற்பத்திப் பொருட்களைப் போல் வர்த்தகப் பொருட்களாகும். ஏனைய உற்பத்திப் பொருட்களின் பெறுமதி தீர்மானிக்கப்படுவது போல் அவர்களின் பெறுமதியும் தீர்மானிக்கப்பட வேண்டும்.
உற்பத்திப் பொருட்களின் “பரிமாற்றப் பெறுமானம்”உற்பத்திக்குத் தேவையான தொழிலாளர்களைத் தொடர்ந்து பராமரிப்பதன் மூலமே உறுதிப்படுத்தப்பட்டது. தொழிலாளர்கள் தன்னையும், தனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு ஏற்படும் செலவினை ஈடு செய்வதற்குத் தேவையான ஊதியத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் உண்மையில் முதலாளித்துவ சமூகத்தில் இது நடைபெறுவதில்லை. தொழிலாளர்கள் பெறும் ஊதியம் தமது ஜீவனோபாயத்தினை நடாத்துவதற்கு தேவையானதையும் விட குறைவாகவேயிருந்தது. இதற்கான காரணம் மிகவும் தெளிவானதாகும்.
உண்மையில் உற்பத்திக்கு பயன்படும் கருவிகளாகிய இயந்திரங்கள், கருவிகள்,மூலப்பொருள், என்பன சிறிய ஒரு வர்க்கமாகிய முதலாளி வர்க்கத்திற்குச் சொந்தமானதாகும். இவர்களே முதலாளி வர்க்கமாகும். தொழிலாளர்கள் உழைப்புத் திறன் ஒன்றிற்கு மாத்திரமே சொந்தக்காரர்களாகும். இவர்கள் தமது உழைப்பினை முதலாளிகளுக்கு விற்று ஊதியத்தைப் பெற்றனர்.
ஆனால் சந்தையில் விற்பனை செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை வாங்கக் கூடியளவு விலை விகிதாசாரத்திற்கேற்ற ஊதியத்தை தொழிலாளர்கள் பெறுவதில்லை. தொழிலாளர்கள் விரைவில் குறைவடைந்து விடும் திறன் கொண்டவர்கள் என்பது முதலாளிகளின் கருத்தாகும். அதேநேரம் தொழிலாளர்கள் தகுதியின்மையும், இயலாமைகளையும் கொண்டவர்கள். இதனை முதலாளிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்துகின்றார்கள். குறைந்த ஊதியத்தை முதலாளிகள் வழங்க அதனைத் தொழிலாளர்களும் ஏற்றுக்கொள்ளுகின்றார்கள். அதன்மூலம் முதலாளிகள்; தமது இலாபத்தை அதிகரிக்கின்றனர்.
ஆகவே உற்பத்திப் பொருட்களுக்கான பரிமாற்றப் பெறுமானத்திற்கும், தொழிலாளர்களிற்கு வழங்கப்படும் ஊதியத்திற்கிடையிலும் வேறுபாடு தோன்றுகின்றது. இதனையே கால்மாக்ஸ் “மிகைப்பெறுமானம்” என அழைக்கின்றார். இம்மிகைப் பெறுமானம் முதலாளிகளால் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே கால்மாக்ஸின் வாதமாகும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத ஊதியம் உண்மையில் முதலாளிகளினால் மேற்கொள்ளப்படும் சுரண்டலாகும். தொழிலாளர் மீதான சுரண்டல் நீக்கப்பட வேண்டும். சோசலிச சமூகம் ஒன்றிலேயே இது சாத்தியமாகும் என்பதே கால்மாக்ஸின் முடிவாகும்.
இயக்கவியல்பொருள்முதல்வாதம்
இயக்கவியல் ,பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டும் மாக்சிசக் கோட்பாட்டிற்கான அடிப்படைத்தத்துவங்களாகும். வரலாறு என்பது இயக்கவியல், பொருள்முதல்வாதம் ஆகிய இரண்டினூடாக படிப்படியாக வளர்ச்சியடைந்த சமூகம் பற்றிய வரலாறேயாகும்.
இயக்கவியல் தத்துவம் ஹெகலினால் உருவாக்கப்பட்டதாகும். ஆயினும் கால்மாக்ஸ் இயக்கவியலுடன் பொருளாதாரம், வரலாறு ஆகிய இரண்டினையும் இணைத்து ஆய்வு செய்கின்றார். கால்மாக்ஸிற்கு முன்னர் யாரும் இயக்கவியலை பொருளாதாரம், வரலாறு ஆகியவற்றுடன் இணைத்து ஆய்வு செய்யவில்லை.
உலக வரலாறு “வர்க்கப் பேராட்டத்தின் வரலாறு” என்பதே கால்மாக்ஸின் வாதமாகும். சமூகப் பொருளாதார மாற்றங்கள் பொருளாதாரப் பலத்தினாலேயே நிகழ்கின்றது என்பது கால்மாக்ஸின் முடிவாகும். சமூகம், பொருளாதாரம், வரலாறு, இவைகளைப் படிப்பதற்கான முறையியலாக கால்மாக்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை பயன்படுத்தும் போது அதற்குள் இயக்கவியல் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.
சமூக வரலாற்றின் அபிவிருத்தியை கோள் (Thesis) முரண்கோள் (Anti-Thesis)என்ற எண்ணக்கருக்களுக்கூடாக கால்மாக்ஸ் விளக்குகின்றார். வரலாற்றில் தோன்றிய ஒவ்வொரு சமூகத்தினையும் “கோள்” என்றும் அச்சமூகத்திற்குள்ளிருந்து அச்சமூகத்தினை எதிர்க்கின்ற சமூகத்தினை “முரண்கோள்” என்றும் கூறுகின்றார். எனவே வரலாற்றில் ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் முரண்கோள் காணப்படுகின்றது. இம்முரண்கோள் அச்சமூகத்தினை அழித்து புதிய சமூகத்தினை தோற்றிவித்தது. சமூக வரலாற்றின் தொடர்ச்சி இதன்மூலமே ஏற்பட்டது என்பது கால்மாக்ஸின் கருத்தாகும்.
கால்மாக்ஸ் கூறும் இயக்கவியல் முரண்பாட்டு எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. பதிலாக வர்க்க இயக்கவியலை அடிப்படையாகக் கொண்டது. வர்க்க முரண்பாட்டினால் புதிய உற்பத்திமுறைகள் பிறந்துள்ளன. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு உற்பத்திமுறைகளைக் கொண்டிருந்தன. வரலாற்றினூடான உற்பத்திமுறைகளுக்கான இம்மாற்றம் இயக்கவியலூடாகவே நிகழ்ந்தது. இயக்கவியல் புதிய உற்பத்திமுறைகளுக்கு வழிகாட்டியாகி, வரலாற்றில் புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உற்பத்திக்கான மூலப்பொருள் வகிக்கும் இடத்தினைப் பொறுத்தே சமூகம் ஒன்றின் அடிப்படை தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவாக கால்மாக்ஸ்சும் பிரட்றிக் ஏங்கல்ஸ்சும் மேற்கு ஐரோப்பாவினை அடிப்படையாகக் கொண்டும் உற்பத்திக்கான மூலப்பொருள் சமூகத்தில் வகிக்கும் இடத்தினைப் பொறுத்தும் சமூகத்தின் அபிவிருத்தியை ஐந்து படிநிலைகளாக பிரிக்கின்றார்.
முதலாவது படிநிலையில் ஆதிகால கம்யூனிஸ சமூகம் இருந்ததாக கூறுகின்றார். இங்கு உற்பத்திமுறைமை சமுதாயம் சார்ந்ததாக இருந்தது. இச்சமுதாயத்தின் உற்பத்தி கருவிகளாக வேட்டையாடுதலாகவும், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைத் திரட்டி குவிப்பதாகவும் இருந்தது. இங்கு சொத்துக்கள் யாவும் யாருக்கும் சொந்தமாக இருக்கவில்லை. வேட்டையாடுதல் மூலமும், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைத் திரட்டிக் குவிப்பதன் மூலமும் கிடைத்த மேலதிகப் பொருட்கள் சேமிப்புக்களாகின. இது சமூகத்தில் சமமின்மையினைத் தோற்றிவித்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். யாரிடம் மிகையான சேமிப்பு இருந்ததோ அவரிடம் அதிகாரமும் சென்றடைந்தது. அவர் சமூகத்தின் தலைவரானார்.
சமூகத்தில் தோன்றிய இவ் ஆரம்ப படிநிலை நகர அரசுகளின் தோற்றத்துடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இரண்டாவது படிநிலையில் ஆண்டான் அடிமைச் சமூகம் இருந்தது. இச்சமூகத்தின் தோற்றத்துடன் தனியார் சொத்துடமையும் “வர்க்க சமூகமும்” தோன்றிவிட்டதாக கால்மாக்ஸ் கூறுகின்றார். இங்கு அடிமைகள் ஆண்டானின் சொத்துக்களாகினர். இவர்கள் எவ்வித ஊதியமுமின்றி ஆண்டானிற்காக வேலை செய்தார்கள். இச்சமூக அமைப்பிலிருந்து இயக்கவியல் பற்றி கால்மாக்ஸ் விளக்குகின்றார். அடிமைகள் ஆண்டானின் சொத்துக்கள் மாத்திரமல்ல, ஆண்டானின் பாதுகாவலர்களுமாகும். அடிமைகள் இராணுவத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆண்டான் அடிமை சமூகம் உள்முரண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது.
மூன்றாவது படிநிலையில் நிலப்பிரபுத்துவ சமூகம் இருந்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். நிலப்பிரபுத்துவ சமூகம் நேரடியாக முதலாளித்துவ சமூகத்தின் எழுச்சிக்கு காரணமாகியது என்ற வகையில் முக்கியமான இடத்தை பெறுகின்றது. நிலப்பிரபுத்துவ சமூகம் படுக்கைகளாயமைந்த பல வர்க்கமுறையைக் கொண்டதாகும். இங்கு அரசன், பிரபு, குடியானவன் போன்ற பல வர்க்கங்கள் இருந்தன. குடியானவன் என்பவன் அடிமையினை விட சற்று கூடிய சமூக அந்தஸ்துடையவனாகும். அரசன் நிலங்களின் ஆட்சியாளன். பிரபுக்கள் பெருந்தொகையான நிலங்களுக்குச் சொந்தக்காரனாகும். குடியானவன் தனது தொடர்ச்சியான வாழ்க்கைக்காக பிரபுவின் நிலங்களில் வேலை செய்கின்றவனாகும். குடியானவனால் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திப் பொருட்களில் தனது வாழ்வாதாரத்தை பராமரிப்பதற்குத் தேவையானவை பிரபுவினால் வழங்கப்பட்டது. நிலங்கள் யாவும் பிரபுவிற்குச் சொந்தமாக இருந்ததினால் எஞ்சிய மிகை உற்பத்தி யாவும் பிரபுவுக்குச் சொந்தமாக இருந்தது. ஆண்டான் அடிமைச் சமூகத்தில் அடிமை ஆண்டானின் உடமையாக இருந்தான். பிரபுத்துவ சமூகத்தில் குடியானவன் பிரபுவின் உடமையல்ல. ஆனாலும் அடிமைத்தனத்தின் இயல்பு வேறு வடிவத்தில் தொடர்ந்தது. குடியானவனின் பிள்ளைகள் பிரபுவின் நிலங்களில் பெற்றோர்களுடன் இணைந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. மேலும் குடியானவன் யுத்தகளத்தில் போர்வீரனாகவும் பயன்படுத்தப்பட்டான். நிலச்சொந்தக்காரர்களுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்கள் நிலப்பிரபுத்துவ சமூகத்தை சிதைக்கத் தொடங்கியது. நிலப்பிரபுக்கள் ஏனைய நிலப்பிரபுக்களால் வெற்றிகொள்ளப்பட்டு அவர்களிற்குச் சொந்தமான குடியானவர்களைக் கைப்பற்றிக் கொண்டனர். இது இறுதியில் அரசனின் அதிகாரத்திற்கு ஆபத்தாகியது. மறுபக்கத்தில் நாணயங்களின் அறிமுகம் குடியானவர்கள் சொந்தமாக நிலங்களை வாங்குவதற்கு உதவியது. மேலும் நாணயங்களின் அறிமுகம் புதிய “வர்த்தக சமூகம்” ஒன்றைத் தோற்றிவித்தது. மக்கள் அரசிற்கு வரி செலுத்த வேண்டும் என அரசன் கட்டளை பிறப்பித்தான். தமது நிலங்களைக் கடந்து செல்லும் வர்த்தகர்கள் மீது நிலப்பிரபுக்கள் வரி விதித்தனர். இது நிலப்பிரபுக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையில் புதிய முரண்பாட்டைத் தோற்றிவித்தது. சமூகத்தில் ஏற்பட்ட விஞ்ஞான தொழில்நுட்பத்தின் வளர்ச்சி புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கும் புதிய உற்பத்தி முறைகள் அறிமுகமாவதற்கும் காரணமாகியது. புதிய உற்பத்திமுறைமை முதலாளித்துவ சமூகத்தின் எழுச்சிக்கு உதவியது.
நான்காவது படிநிலையில் முதலாளித்துவ சமூகம் இருந்தது. இங்கு புதிய வர்க்க அமைப்பு இருந்ததாக கால்மாக்ஸ் கூறுகின்றார். தொழிலாளர்கள், புதிய உற்பத்திக் கருவிகளுக்குச் சொந்தக்காரர்களாகிய முதலாளிகள் என்பவர்களே இப்புதிய வர்க்கத்தினர்களாகும். உற்பத்திக் கருவிகளுக்கிடையிலான உறவுகளே “சமூக வர்க்க முறைகளைத் தீர்மானிக்கின்றன என கால்மாக்ஸ் நம்புகின்றார். முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்திக் கருவிகளாகிய நிலம்,தொழிற்சாலைகள், தொழில்நுட்பம், போக்குவரத்து போன்றவற்றின் சொந்தக்காரர்களும் விநியோகத்தர்களுமாக முதலாளிகளே காணப்படுவார்கள். இவர்கள் சமூகத்தில் காணப்படும் சிறிய வர்க்கமாகும். உழைக்கும் திறனை வேதனத்திற்கு விற்பனை செய்து வாழும் மக்கள் தொழிலாளர்களாகும். இவர்கள் சமூகத்தில் பெரும்பான்மையினராகும். இப் பெரும்பான்மைச் சமூகம் தொழிலாளர் வர்க்கம் என அழைக்கப்படுகின்றனர். தொழிலாளர் வர்க்கம் தமது உழைப்பினை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் பொருட்கள், சேவைகள் என்பன முதலாளிகளால் இலாபத்திற்கு விற்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தினர் அரசாங்கத்தில் பிரதான பதவிகளை வகித்ததோடு அரச இயந்திரத்தினை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டிருந்தனர். முதலாளிகள் தமது நலன்களை உயர்த்தவும், பாதுகாக்கவும் ஏற்ற கொள்கைகளை உருவாக்கி அவற்றைச் சட்டமாக்கி கொண்டார்கள். உண்மையில் முழு அரசாங்க இயந்திரமும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டது. இவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான கொடூரமான சுரண்டலுக்கு ஏற்ற பாதுகாப்பினை உருவாக்கிக் கொண்டனர்.
வர்க்க முரண்பாடு
சமூக முரண்பாடு தொடர்பாக கூறும் அதி சக்தி வாய்ந்த சமூகவியல் விளக்கங்களுள் ஒன்றாக கால்மாக்ஸின் வர்க்க முரண்பாட்டினைக் கூறலாம். உற்பத்தி உறவுகளே வர்க்கமுரண்பாடுகளை தீர்மானிக்கின்றன. சொத்துடமை அதன் கட்டுப்பாடு என்பவற்றுடன் இணைந்ததே வர்க்கமுறையாகும். சமூக பொருள் உற்பத்தி அமைப்பில் பொருள் வகிக்கும் இடம், உற்பத்தி சாதனங்களுடன் பொருளிற்குள்ள உறவு, சமூக அமைப்பில் உழைப்பும் அதற்குள்ள பொறுப்பும், சமூகச் செல்வத்தில் அவற்றின் ஆளுமைக்குட்படும் பங்கின் அளவு, இப்பங்கினை அவையடைந்து கொள்ளும் முறைமை என்பவற்றின் வழி ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபடக்கூடிய மக்கள் குழுவினரே வர்க்கமாகும்.
எனவே வர்க்கம் என்பது சொத்துடமையின் அளவால் தீர்மானிக்கப்படுகின்ற சமுதாய ஒழுங்கமைப்பு எனலாம். இன்னோர் வகையில் கூறின் சமூக வர்க்க அமைப்பானது சொத்துடமையினால் சமத்துவமின்மையினை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது எனலாம். ஆரம்ப காலத்தில் வர்க்கம் என்பது உயர் மக்களாக கருதப்பட்ட சுரண்டுவோர் தோன்றியமை, யுத்தக் கைதிகள் அடிமைகளாக்கப்பட்டமை, வறிய மக்கள் தாம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத போது அடிமைகளாக்கப்பட்டமை மூலம் தோற்றம் பெற்றதாக மாக்ஸ் கூறுகின்றார். ஆனால் மிக ஆரம்ப காலத்தில் மக்கள் சமத்துவமாக வாழ்ந்ததாக மாக்ஸ் கூறுகின்றார். இங்கு மரபுகள், வழக்காறுகள், முதியோருக்கு மதிப்பளித்தல் போன்ற பண்புகள் காணப்பட்டன. முதியோர்கள் சமுதாயக் கடமைகளை நிர்வகித்தனர். இதற்காக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. பிற்பட்ட காலத்தில் உற்பத்தி சக்திகள் பெருக்கமடைய தொழிற் பிரிவினை ஏற்பட்டு சமுதாய நலன்களை நிர்வகிக்கும் தனியமைப்புக்கள் தோற்றம் பெற்றன. இத்தனியமைப்புக்கள் சமுதாயத்தின் ஒரு சாராரிடம் தனிமைப்பட்டன. காலப்போக்கில் சமுதாயத்திலிருந்து இவ்வமைப்புக்கள் விலகி நின்றன. இறுதியில் சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற சமுதாய சுரண்டலை மேற்கொள்ளுகின்ற சுதந்திர அமைப்புக்களாக இவைகள் மாற்றமடைந்தன. இது வர்க்க முறைமை தோன்றுவதற்கும் முரண்பாடு தோன்றுவதற்கும் காரணமாகியது.
முதலாளித்துவ சமூகத்தில் சொத்துடமை கொண்டிருக்கும் உறவுநிலை பல்வேறுபட்ட வர்க்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாகின்றன என கால்மாக்ஸ் விபரிக்கின்றார். அவற்றுள் முதன்மையானவைகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
  1. பூர்ஸ்வாக்கள்: இவர்கள் உற்பத்திக் கருவிகளின் உடமையாளர்களாகும். பாட்டாளி வர்க்கத்திடமிருந்து உழைப்புச் சக்தியை இவர்கள் சுரண்டுகின்றார்கள். பூர்ஸ்வாக்களை மிகவும் செல்வந்த பூர்ஸ்வாக்கள், சிறிய பூர்ஸ்வாக்கள் என இரண்டாக வகைப்படுத்தலாம். சிறிய பூர்ஸ்வாக்கள் சிறிய முதலீட்டாளர்களாக, நிலவுடமையாளர்களாக, வர்த்தகர்களாக காணப்பட்டார்கள்.
  2. பாட்டாளிகள் வர்க்கம்: இவர்கள் தமது உழைப்புச் சக்தியை விற்பனை செய்பவர்களாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் எவ்வித உற்பத்தி கருவிகளையும் கொண்டிராதவர்களாகும். முதவாளித்துவ உற்பத்தி முறையானது பாட்டாளிகளைச் சுரண்டுவதற்கு ஏற்ற வகையில் பூர்ஸ்வாக்களினால் உருவாக்கப்பட்டதாகும்.
  3. கீழ் வர்க்க பாட்டாளிகள்: குற்றவாளிகள், நாடோடிகள், பிச்சைக்காரர்கள், போன்றவர்களை உள்ளடக்கிய வர்க்கமாகும். இவர்கள் பொருளாதார முறைகளுக்குள் உள்வாங்கப்படாதவர்களாகும். இவர்கள் தங்களைத் தாங்களே உயர்ந்த ஏலத்திற்கு விற்கக் கூடியவர்கள்.
  4. நிலவுடமையாளர்கள்: இவ்வர்க்கத்தினர் வரலாற்று ரீதியாக முதன்மையானவர்களாகும். தங்களிடமுள்ள நிலவுடமையின் அடிப்படையில் செல்வத்தையும், அதிகாரத்தையும் கொண்டிருந்தனர்.
  5. விவசாயிகள், பண்ணையாளர்கள்: இவ்வர்க்கத்தினர் மாற்றத்தினை ஏற்படுத்தும் திறனற்றவர்களாகவும், ஒழுங்குபடுத்தப்படாதவர்களாகவும் காணப்பட்டதாக கூறும் கால்மாக்ஸ் இவர்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடலாம். பலர் பாட்டாளிகளாகவும், சிலர் நிலவுடமையாளர்களாகவும் மாற்றமடையலாம் எனக் கூறகின்றார்.
எல்லா சமூகத்தினதும் வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறேயாகும். வரலாற்று ஆசிரியர்கள் தேசங்களுக்கு இடையிலான யுத்தமே வரலாறாகும் எனக் கூறுகின்றார்கள். ஆனால் கால்மாக்ஸ் வர்க்கங்களுக்கிடையிலான புரட்சிகரமான போராட்டமே வரலாறு எனக் கூறுகின்றார். இவ்வர்க்கப் பேராட்டம் புரட்சிகரமான மீள்கட்டமைக்கப்பட்ட பாரிய புதிய சமுதாயம் ஒன்றை இறுதியில் தோற்றிவிக்கின்றது. எல்லா சமுதாய மாற்றங்களும் பொருளாதார வர்க்கப் போராட்டத்தினால் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும் மனிதாபிமானத்தின் வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகவேயுள்ளது. ஒவ்வொரு உற்பத்தி முறைமையும் சுரண்டுபவர்,சுரண்டப்படுபவர் என்ற இரண்டு எதிர்வினை பொருளாதார வர்க்கங்களைத் தோற்றிவித்தது. அதாவது அடக்குபவர், அடக்கப்படுபவர் என்ற இரண்டு வர்க்கங்களைத் தோற்றிவித்தது. சமுதாயம் இயங்கியல் பண்பு கொண்டது. மாற்றங்களும், பரிணாமமும் இதன் பண்புகளாகும்.
வர்க்கம் சொத்தினால் தீர்மானிக்கப்படுகின்றதேயன்றி வருமானம் அல்லது அந்தஸ்தினால் தீர்மானிக்கப்படுவதில்லை. வருமானம், அந்தஸ்து ஆகியவை நுகர்வு, விநியோகம் என்பவைகளால் தீர்மானிக்கப்படுவதுடன், உற்பத்தியிலும், வர்க்க அதிகார உறவிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன. பூர்ஸ்வாக்களின் சமூகநிலை அவர்களிடமுள்ள சொத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது. வர்க்கம் தனிநபர்களுக்கிடையில் கோட்பாட்டு ரீதியான முறை சார்ந்த உறவுநிலைகளைத் தோற்றிவிக்கின்றது. வர்க்கப்போராட்டமானது, வர்க்க அங்கத்தவர்களினால், வர்க்க நலன்களுக்காக நடாத்தப்படுகின்றது. ஒவ்வொரு தனிநபர்களும் தனது வர்க்க நிலையினைப் பொறுத்து இணைந்து செயற்படுகின்றனர். பின்னர் படிப்படியாக ஒவ்வொரு வர்க்கத்தினுள்ளும் இருக்கும் தனிநபர்கள் பரஸ்பரம் ஒவ்வொருவரில் தங்கியிருக்கவும், பொது வருமானத்தினை அல்லது கூலியினை தமக்கிடையில் பகிர்ந்து கொள்ளவும் தயாராகிவிடுகின்றனர். இப்பொது நலனிலிருந்து வர்க்கம் என்பது உருவாகி விடுவதுடன் தனது பொதுநலனுக்கு எதிரான வர்க்கத்துடன் போராடவும், தனது நலனைப் பேணவும் தயாராகிவிடுகின்றது.
வர்க்கப் புரட்சி
முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகளே பொருளாதார பலமுள்ளவர்களாக இருப்பதால் இயல்பாகவே அரசியலதிகாரமும் அவர்களிடம் சென்றுவிடுகின்றது. இதனால் இச்சமூகத்தில் அரசு என்பது முற்றாக முதலாளித்துவ நலன்பேணும் ஒரு கருவியாகவே விளங்கும். அது தனது நிலைபேற்றிற்கு ஆயுத பலத்திலேயே தங்கியுள்ளது. சிறுபான்மையினரான முதலாளிகள் பெரும்பான்மையினரான பாட்டாளிகளின் பலத்தை ஆயுத பலத்தின் மூலம் அடக்குகின்றார்கள். இதற்காக முதலாளித்துவ சமூகத்தில் காணப்படும் சட்டம், காவல்துறை, இராணுவம், நீதிமன்றம், சிறைச்சாலை அனைத்தும் பாட்டாளிகள் மீது முதலாளிகளின் அடக்குமுறைச் சாதனங்களாகப் பயன்படுகின்றன. முதலாளித்துவ சமூகத்தில் முதலாளி – பாட்டாளி வர்க்கமுரண்பாடுகள் நாளடைவில் பெருகும். இம்முரண்பாடு வர்க்க மோதல்களுக்கு வழிவிடும். முதலாளித்துவம் என்பது ஆயுத பலத்தை நம்பியிருக்கும் ஆட்சிமுறையாகும். எனவே எந்த மோதல்களையும் ஆயுத பலத்தின் மூலம் அடக்கவே முதலாளிகள் முற்படுவார்கள். எனவே இவ்வாயுத பலத்தை பாட்டாளிகளும் ஆயுத பலத்தின் மூலமே முறியடிக்க வேண்டும். இதன்மூலம் பாட்டாளி மக்களின் விடுதலைக்கு பலாத்காரப் புரட்சி அல்லது ஆயுதப் புரட்சி அவசரமும் அவசியமானதுமாகும். எந்தவொரு பழைய சமூகத்திலிருந்தும் புதியதோர் சமூகம் பிறக்க பலாத்காரம் மருத்துவ மாதாகத் தொழிற்படுகின்றது என மாக்ஸ் கூறுகின்றார். இந்நிலையினை மாக்ஸ் பின்வருமாறு விபரிக்கின்றார்.
“பலாத்காரப் புரட்சிக்காக பாட்டாளிகள் தம்மைத் திட்டமிட்டு ஒழுங்கமைக்க வேண்டும். இவ்வாறு இடம்பெறும் பலாத்காரப்புரட்சி வரலாற்றில் இடம்பெறும் சகல புரட்சிகளிலும் சிறப்பானதாகும். வரலாற்றில் இடம்பெற்ற வேறு எந்தப் புரட்சியினாலும் வர்க்கமுரண்பாடுகளோ, சுரண்டலோ, அரசு என்ற அமைப்போ ஒழிக்கப்படவில்லை. மாறாக அவை வேறோர் வழியில் மாற்றீடு செய்யப்பட்டன. ஆனால் பாட்டாளிகளின் புரட்சி என்பது வர்க்கமுரண்பாடு, சுரண்டல், அரசு என்ற மூன்றையும் ஒழித்துவிடும் தன்மை கொண்டதாகும்” என மாக்ஸ் கூறுகின்றார்.
எனவே முதலாளித்துவ சமுதாயம் தனது பரிணாம வளர்ச்சியில் பூரணமாகவே இல்லாதொழிக்கப்பட்டு பிறிதொன்றினால் வெற்றிகொள்ளப்படும். முதலாளித்துவமும், முதலாளித்துவ முறைமையும் தனது அழிவிற்கான வித்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பாட்டாளிகள் ஐக்கியப்பட்டு முதலாளித்துவ வர்க்கத்தினை வீழ்த்துவார்கள். இதன்மூலம் பாட்டாளிகள் அதிகாரத்தை கைப்பற்றுவர். பாட்டாளி வாக்க சர்வாதிகார ஆட்சி முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார செயற்பாடுகள் அனைத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும். பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி சோசலிச புரட்சி மூலம் தோற்கடிக்கப்படும் போது இயற்கைச் சட்டங்களால் சமுதாயம் ஆட்சி செய்யப்படும்.
சோசலிச சமுதாயம் பாட்டாளி வர்க்க புரட்சியிலிருந்து எழுச்சியடைந்த வர்க்கங்களற்ற சமுதாயமாகும். சோசலிசம் சமூகப் பரிணாமத்திலுள்ள இயற்கைச் சட்டங்களால் தீர்மானிக்கப்படுகின்ற போது தனிமனிதர்களின் சுதந்திரமான விருப்பங்கள், நோக்கங்கள் இச்சட்டங்களால் தீர்மானிக்கப்படும். எல்லா நிலங்களும் மூலதனமும் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும். இதன்மூலம் சுரண்டல் தடுக்கப்படும். சொத்துடையவர்களின் கொடுங்கோண்மை இல்லாதொழிக்கப்படும். எல்லா மனிதர்களும் சுதந்திரமாக இருப்பார்கள். கம்யூனிச அறிக்கையின் இறுதியில் கால்மாக்ஸ் “கம்யூனிசத்திற்காக எல்லாத் தொழிலாளர்களையும் எழுச்சி பெறுமாறு” அழைப்பு விடுக்கின்றார். “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு கை விலங்குகளைத் தவிர எதுவுமில்லை. நீங்கள் வெல்லுவதற்கு உலகம் உள்ளது.”
சோசலிச அடிப்படைகளில் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்கு உலகைப் பற்றிய விஞ்ஞான பூர்வமான புரிந்துணர்வு தேவைப்படுகின்றது. இவ்வகையில் மாக்ஸிசம் என்பது இயற்கை மற்றும் சமுதாயத்தின் வளர்ச்சியைப் பற்றிய பொதுவான விதிகள்,சோசலிசப் புரட்சியின் வெற்றி, சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தின் கட்டுமானப் பாதைகள் ஆகியவற்றை பற்றிய விஞ்ஞான கருத்துக்களடங்கிய தத்துவமாகவுள்ளது. சமூக உறவுகளின் மத்தியில் பொருளாதார அல்லது உற்பத்தி உறவுகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இதனைப் படிக்காமல் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கும், கம்யூனிசத்திற்கும் எப்படி மாறிச் செல்வது என்ற கேள்விக்குப் பதில் காண முடியாது.