அரசியல் கருத்தியல்(POLITICAL IDEOLOGY)

 அரசியல் கருத்தியல் 



D.JEGATHEESWARAN.

B.A(HONS), M.A(PERA), M.ED(RED), PGDE, DIP.IN.HR, 

SPECIAL IN POLITICAL SCIENCE

அறிமுகம்

சமூகத்தின் அரசியல் அறிவிற்கு தனிநபர்கள் மற்றும் சமூகக்குழுக்களின் அரசியல் செயற்பாட்டிற்கும், அரசியல் நிறுவனங்களின் தன்மை, மற்றும் பணிகளையும் தீர்மானிப்பதில் செல்வாக்கு செழுத்துகின்ற ஒழுங்கமைந்த வகையில் காணப்படும் அரசியல் கருத்துக்களின் தொகுப்பே அரசியல் கருத்தியல் எண்ணக்கருவின் விளக்கமாகும். அரசியல் கோட்பாடுகள், மற்றும் அரசியல் சிந்தனைகள் என்பன இதற்காக பயன்படுத்தப்படுகின்ற இருவேறு பதங்களாகும். அரசறிவியலில் அரசியல் கருத்தியல்கள் என்ற எண்ணக்கருவானது முறையாக அமையப்பெற்றுள்ள அரசியல் சிந்தனைகள் தொகுதிகள் மற்றும் கருத்துக்களின் தொகுதி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது.

அரசியல் கருத்தியல் ஒன்று பிரசித்தமான சிந்தனையாளர் ஒருவரின் அல்லது சிந்தனையாளர்கள் பலரின் கற்பிதங்கள் மற்றும் கருத்துக்களின் தொகுதியாக கட்டியெழுப்பப்பட்டடிருக்கலாம். அன்றேல் பிரதான ஒரு சிந்தனையாளர் இன்றி சிந்தனையாளர்கள் பலரினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் வளர்ச்சியின் பெறுபேறாக கட்டியெழுப்பப்பட்டிருக்க முடியும்.

01. கருத்தியல் என்பதன் பொருள் POLITICAL IDEOLOGY)

கருத்தியல் என்ற சொற்பதத்திற்கு பல அறிஞர்கள் வேறுபட்ட விளக்கங்களை முன்வைத்துள்ளனர். அவ்வகையில் 'கருத்தியல்' என்ற சொல் கருத்து முரண்பாட்டுக்குரிய சொல்லாக கண்டுகொள்ளப்படுகிறது. கருத்தியல் என்பது கருத்து இயல் (Idea+Logy) என பிரித்து நோக்கப்பட்டால் 'இயல்' என்ற சொல்லுக்கு விஞ்ஞானம் என்ற அடிப்படை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 'கருத்துக்களின் விஞ்ஞானமே கருத்தியல்' (Science of ideas) என்று பொதுவாக கூறப்படுகிறது. அத்துடன் இது கருத்துக்களை மதிப்பீடு செய்கின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது. 1797 மே மாதம் 23 ஆம் திகதி பிரான்சிய கோட்பாட்டாளரான Destutt De Tracey என்பவரால் முதன் முதலில் கருத்தியல் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இவர் நடைமுறை செயற்பாடுகளை பிரதிபலிக்கும் ஒரு சொற்பதம் என்ற வகையிலேயே கருத்தியலை பயன்படுத்தினார். இவர் கருத்தியலை கருத்துக்களின் விஞ்ஞானம் (Science of Ideas) என விளக்கினார். H.M.Drucker என்ற அறிஞர் கருத்தியலை 'விஞ்ஞான பூர்வமற்ற இறந்த காலத்திற்கான நவீன பதில்' என விளக்கமளித்தார்.


சில வரைவிலக்கணங்கள்.

v  Destutt De Tracey

கருத்தியலானது ஒழுங்கமைக்கப்பட்ட கருத்துக்களின் கூட்டாக காணப்படுகின்றது. அதன்படி அது கருத்துக்களின் விஞ்ஞானமாக (Science of Ideas) காணப்படுகின்றது.

சமூக விஞ்ஞானிகளின் கருத்துப்படி,

ஒவ்வொரு சமூகமும் பொதுசன அபிப்பிராயம் (Public Opinion) அல்லது பொதுவான உணர்வு (Public Opinionபோன்றவற்றின் அடிப்படைகளை வடிவமைக்கின்றதாக கருத்தியலை கொண்டு காணப்படும். இவை வழமையாக சமூகத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் கண்ணுக்கெட்டாதவையாக காணப்படும்.

v  Hyppolyte Taine

தனது“Origin of Contemporary France” என்ற நூலில் பொதுவாக வாசிப்பாளனுக்கு ஏற்கனவே உள்ள அல்லது காணப்படும் அருஞ்சொற்பதங்கள் தொடர்பான அறிவை நீடிக்காது, நடைமுறை விஞ்ஞானத்திற்கு தேவைப்படும் அவதானிப்பு மூலமான உதாரணங்கள் இல்லாது மெய்யியலை சோக்ரடிஸ் முறையில் கற்பிப்பது போன்றதே கருத்தியல் என விளக்கமளிக்கின்றார்.

ஆங்கில அகராதி:-

மனித வாழ்வு தொடர்பான அல்லது கலாசாரம் தொடர்பான ஒரு முறையான திட்டம் அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட கருத்துக்களின் பகுதியாக காணப்படுகின்றது.

ஜேர்மனிய மெய்யியலாளரான Christian Dunker:-

தனது '“Critical Reflection of the ideology concept” (2006) என்ற நூலில் 'கருத்தியல் என்ற சொல்லானது முன்வைத்தல் முறைமையாக (System of presentation) காணப்படுவதுடன் அது உண்மை தொடர்பான வெளிப்படையான (Implicitly) (explicitlyஅல்லது  கோரிக்கைகளாகவும் காணப்படுகின்றது.

அரசியல் கற்கைக்கான சஞ்சிகை:-

கருத்தியல் என்பது முறைமையில் உள்ள உறுப்பினர்களுக்கு இறந்த காலம் தொடர்பில் விளக்கம் கொடுப்பதாக இருப்பதுடன் நிகழ்காலத்தினை விளக்குவதுடன் எதிர்காலத்திற்கான ஒரு நோக்கினையும் வழங்குகிறது. அதன்படி முறைமைக்குள் உள்ள உறுப்பினர்களுக்கு அரசியல் அதிகாரம் தொடர்பான நோக்கத்தை விளக்குவதுடன் அதன் வரையரைகளையும் விளக்குகின்றது.

சமகால அரசியல் கோட்பாடு :-

கருத்துக்கள் சில வேளைகளில் சில தகவல்களுக்கான விளக்கம் என்ற வகையிலும் அல்லது சில கோரிக்கைகளுக்கான நியாயப்படுத்தல்களாகவும், சில உண்மைகளின் தேடுதலாகவும் இருக்கின்றது. இதனடிப்படையில் கருத்தியலானது இயற்கை, சமூகம், வரலாறு என்பவற்றில் மனிதனின் நிலை, இடம் தொடர்பாக குறைவாக அல்லது கூடுதலாக முறைப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்களின் தொகுதியாக காணப்படுகின்றது.

v  S.P.Huntington:-

கருத்தியல் என்பது அரசியல் மற்றும் சமூக பெறுமதிகளை பங்கீடு செய்தல் தொடர்பாக கவனம் செலுத்தும் கருத்துக்களின் முறைமையாகும்.

கருத்தியல் என்ற சொற்பதமானது நிகழ்காலத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான ஒரு சொல்லாக காணப்படுகின்றது. அத்தோடு அபிப்பிராயங்கள், மனபாங்குகள் பெறுமதிகளின் ஒழுங்கமைப்பாகவும் காணப்படுகின்றது. மேலும் மனிதன், சமூகம் தொடர்பில் எவ்வகையில் நோக்குகின்றோம் என்பதையும் வெளிப்படுத்துகின்றது. கருத்தியல் என்பது சில குழுக்களால் உண்மையாக  ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்கள் அல்லது நம்பிக்கையான முறைமையாகும். எனவே கருத்தியல் என்ற சொற்பதமானது மேற்கூறப்பட்டவாறு பலதரப்பட்ட விளக்கங்கள் மூலம் தெளிவுப்படுத்தப்படுகிறது.


No comments:

Post a Comment